ஆஃப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்த நாட்டு படைகளுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நடைபெற்று வந்தது. அமெரிக்க படைகள் அந்த நாட்டில் இருந்து வெளியேறியதால், தலிபான்களின் ஆதிக்கம் அந்த நாட்டில் தீவிரமடைந்த நிலையில், தலிபான்கள் ஆஃப்கானிஸ்தான் முழுவதையும் நேற்று கைப்பற்றினர். அந்நாட்டின் அதிபர் அஷ்ரப்கனி அண்டை நாடான தஜிஹிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. தலிபான்கள் முழு நாட்டையும் கைப்பற்றிவிட்டதால் அந்த நாட்டு மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். அந்த நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டினர் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். அந்த நாட்டு மக்கள் பலரும் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று வருகின்றனர். தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் ஆப்கான் மக்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 5 பேர் வரை உயிரிழந்தனர். 




ஆஃப்கானிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள் உலகையே உலுக்கி வருகிறது. பல்வேறு தரப்பினரும் ஆஃப்கானிஸ்தான் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆஃப்கன் சம்பவம் குறித்து பேசிய அந்நாட்டு பெண் இயக்குநர் சாஹ்ரா கரிமி உலக நாடுகளை கடுமையாக சாடியுள்ளார். இன்னும் ஏன் சர்வதேச அமைப்புகள் அமைதியாக இருக்கின்றன  என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பெண் இயக்குநர் எழுதியுள்ள நீண்ட கடிதத்தை பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் பகிர்ந்துள்ளார்.


அந்த கடிதத்தில், ”எங்களுக்கு இந்த மவுனம் பழகிவிட்டது. ஆனால் இது நியாயமற்றது . எங்களது மக்களைக் கைவிட எடுத்த முடிவு தவறானது. அவசர அவசரமாகப் படைகளைப் பின்வாங்கியது எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம். அமைதிப் பேச்சுவார்த்தை என்ற போலி நடவடிக்கை தலிபான் தரப்பை மேலும் ஊக்கப்படுத்தி விட்டது.  அரசாங்கத்துக்கு எதிராக போர் தொடுக்கவும், மக்களைக் கொடுமைப்படுத்தவும் அந்த அமைப்புக்கு தைரியத்தை கொடுத்துவிட்டது. இந்த நிலையால் 20 வருடங்களாக எங்கள் இளம் தலைமுறை பெற்ற ஆதாயங்கள் அனைத்தும் காணாமல் போகும். மீண்டும் ஆஃப்கான் இருண்ட காலத்துக்கு செல்லும். தலிபான் கலைகளை தடை செய்வார்கள். அவர்கள் கொலை செய்ய வேண்டிய பட்டியலில் நானும் மற்ற இயக்குநர்களும் இருப்பார்கள். உரிமைகளை பறிப்பார்கள். இருளில் தள்ளுவார்கள். வீட்டுக்குள் அடைக்கப்படுவோம். குரல் நெறிக்கப்படும். எங்கள் பள்ளிகள் நாசம் செய்யப்படும். இந்த உலகத்தின் அமைதி எனக்கு புரியவே இல்லை. இந்த உலகையே எனக்கு புரிந்துகொள்ள முடியவில்லை. நான் போராடுவேன். ஆனால் தனியாக முடியாது. நண்பர்களாகிய நீங்கள் துணை நிற்க வேண்டும். ஆப்கானுக்கு வெளியே இருக்கும் ஊடகங்கள் எங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.