கனடா தலைநகர் ஒட்டாவாவின் முக்கியத் தெருக்கள் அனைத்தையும் லாரி ஓட்டுநர்கள் ஆக்கிரமித்து, திரும்பும் திசையெல்லாம் லாரிகள் நிறுத்தி வைத்திருக்கின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக லாரி ஓட்டுநர்கள் நடத்தும் போராட்டம்தான் கனடா தலைநகர் ஒட்டாவாவை இப்படி ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. அடிக்கடி ஹாரன்கள், சைரன்கள், பட்டாசுகள் மூலம் ஒலியெழுப்பி போராட்டத்தைக் கொண்டாட்டமாக மாற்றியிருக்கிறார்கள் கனடாவின் லாரி ஓட்டுநர்கள்.


10 நாள்களுக்கு மேலாக நடந்து வரும் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த இயலாமல் திண்டாடிவருகிறது ஜஸ்டின் ட்ரூடோவின் கனடா அரசு. அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, கனடாவில் தொற்றுப் பரவலைத் தடுக்க தீவிரமான கட்டுப்பாடுகள் விதித்தார்கள். அதில் குறிப்பாக, `பொது இடங்களுக்கு வருபவர்களும், பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்களும் கட்டாயம் தடுப்பூசிச் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்பதும் லாரி ஓட்டுநர்கள் பயணம் மேற்கொள்ள தடுப்பூசிச் சான்றிதழ் அவசியம் என்றும் கனடா அரசு உத்தரவிட்டிருந்தது.






அதன்மூலம் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை அடுத்து, லாரி ஒட்டுநர்கள் பலரும் இதற்கு எதிராக குரல்கொடுக்கத் தொடங்கினர். கடந்த ஜனவரி 29-ம் தேதி அன்று, கனடா முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் தலைநகர் ஒட்டாவாவை நோக்கிப் தங்கள் லாரிகளுடன் படையெடுத்து வந்துள்ளனர். அன்றிலிருந்து, தினசரி பல நூறு லாரி ஓட்டுநர்கள் ஒட்டாவாவை வந்து சேர்ந்தனர். ஒட்டாவாவின் சாலையோரங்களில் ஆங்காங்கே சிறு சிறு கூடாரம் அமைத்து தீவிர போராட்டங்களில் ஈடுப்பட்டனர். கட்டாயத் தடுப்பூசி உத்தரவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு கடுமையான நெருக்கடியை உண்டாக்கினர்.


முதலில், லாரி ஓட்டுநர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில், நாட்கள் செல்லச் செல்ல கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான மனநிலையிலிருக்கும் பொது மக்களும் கலந்துகொள்ளத் தொடங்கியதால் கனடா அரசுக்கு நெருக்கடி மேலும் அதிகரித்தது. இதனால் ஒட்டாவாவில் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, சில நாட்கள் முன்பு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்தோடு ரகசிய இடத்துக்குச் சென்றுவிட்டார்' எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.



போராட்டத்தின் விளைவுகள்


இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் காரணத்தால் இதுவரை நூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் கனடாவின் வியாபாரம் பாதிக்கப் பட்டுள்ளது. இவர்களது போராட்டம் சர்வதேச கவனம் பெறுவதால், இவர்கள் போலவே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. அதே போல அமெரிக்காவில் உள்ள ட்ரக் ஓட்டுனர்களும் இதே போன்ற போராட்டத்தை நடத்துவதற்கு தயாராகி வருவதாக கூறுகிறார்கள். கனடாவின் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் பார்டியின் தலைவர் எரின் ஒடூல் இந்த போராட்டத்தில் அவரது கட்சியினரை ஆரம்பத்தில் இணைத்துக்கொள்ளாததால் கோபமாக உள்ளாராம். 






இதுவரை கனடா அரசின் நடவடிக்கை!


கடந்த 10 நாட்களை தாண்டி ஒட்டாவாவில் நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தால் கனடா அரசுக்குப் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. லாரி ஓட்டுநர்களோ, `கட்டாய தடுப்பூசி உத்தரவை நீக்கினால் மட்டுமே, போராட்டத்தைக் கைவிடுவோம்' என்ற கோரிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். அதனால், போராட்டத்தையும் பொருளாதாரத்தையும் என்ன செய்வதென்று அறியாமல் திண்டாடிவருகிறது கனடா அரசு.


இந்நிலையில், எப்படியாவது போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஒட்டாவா முழுவதும் அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்தி உத்தரவிட்டார் ஒட்டாவா மேயர் ஜிம் வாட்ஸன்.


"காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை போராட்டக்காரர்களைவிட குறைவாக இருக்கும் காரணத்தால், போராட்டங்கள் எல்லைமீறிச் சென்று கொண்டிருக்கின்றன. ஒட்டாவா நகரத்தை உடனடியாக மீட்டெடுக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்திருந்தார் ஜிம் வாட்ஸன்.



ஜஸ்டின் ட்ரூடோ திட்டங்கள்!


இந்நிலையில் கனடா நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ``இந்தப் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்'' என்று வலியுறுத்தியதோடு மட்டுமல்லாமல் லாரி ஓட்டுநர்களைக் கடுமையாக விமர்சித்தும் பேசினார். பிப்ரவரி 8-ம் தேதி அன்று, தனது ட்விட்டர் பக்கத்தில், "கனடா மக்களுக்குப் போராட்டம் நடத்துவதற்கும், தங்கள் அரசாங்கத்துடன் உடன்படாமல் இருப்பதற்கும், தங்கள் குரல்களை அரசாங்கத்தை கேட்கச் செய்வதற்க்கு எல்லா உரிமையும் உண்டு. அந்த உரிமையை நாங்கள் எப்போதும் சீர்குலைக்க மாட்டோம். ஆனால், நமது நாட்டின் பொருளாதாரத்தையோ, ஜனநாயகத்தையோ அல்லது நமது சக குடிமக்களின் அன்றாட வாழ்க்கையையோ முடக்க யாருக்கும் உரிமை இல்லை. அந்த செயல் நிறுத்தப்பட வேண்டும்!'' என்று பதிவிட்டிருந்தார் ஜஸ்டின் ட்ரூடோ.


இது குறித்து போராட்டக்காரர்கள் தரப்பு, "பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, போராட்டக்காரர்களைக் கண்டித்தது மிகவும் தவறு. எங்களுக்கு என்ன வேண்டும் என்பதைக் கேட்கவே அவர்கள் தயாராக இல்லை எனும்போது கட்டாய தடுப்பூசி உத்தரவு திரும்பப் பெறும்வரை போராட்டங்கள் ஓயாது" என்று கூறியிருக்கிறார்கள்.






ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் நெருக்கடி


கடந்த 2019 தேர்தலில், ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்குப் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி அமைத்து ஆட்சியை அமைக்க வேண்டிய சூழல் ட்ரூடோவுக்கு இருந்தது. அதன்படி அடுத்த தேர்தல், 2023-ம் ஆண்டுதான் நடைபெறவிருந்தது. ஆனால், நாடாளுமன்றத்தை இரண்டு ஆண்டுகள் முன்கூட்டியே கலைத்துவிட்டு 2021-லேயே தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார் ஜஸ்டின் ட்ரூடோ. "கூட்டணி ஆட்சி என்பதால், ஜஸ்டின் ட்ரூடோவால் தனித்து எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. அவர் எடுக்கும் முடிவுகளை கேள்விகள் இன்றி அமல்படுத்த இரண்டே ஆண்டுகளில் மீண்டும் தேர்தலை நடத்தி மக்கள் பணத்தை வீணடிக்கிறார்'' என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மீறி தேர்தலை நடத்தி, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினார் ஜஸ்டின் ட்ரூடோ என்பது குறிப்பிடத்தக்கது.


மீண்டும் ஆட்சியில் அமர்ந்த ஒரு சில மாதங்களிலேயே ஜஸ்டின் ட்ரூடோவுக்கு, மிகப் பெரிய பிளாக் மார்க்காக அமைந்துள்ளது லாரி ஓட்டுநர்களின் போராட்டம் என்று உலக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கனடா தாண்டி வெளிநாடுகளிலும் இந்தப் போராட்டம் காரணமாக ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்குச் சரிவை ஏற்படுத்தியிருக்கிறது. லாரி ஓட்டுநர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் பலரும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கொடுத்திருப்பது, ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலத்தையே அசைத்துப் பார்த்திருப்பதாக பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த பிரச்சனையை அவர் எப்படி கையாள்கிறார், எப்படி பொருளாதாரத்தையும், கொரோனாவையும், நாட்டு மக்களையும் சேர்த்து திருப்தி படுத்துவார் என்று உலக நாடுகள் உற்று நோக்கி இருக்கின்றன. 



கனடா மக்கள் மனநிலை


கனடாவில் எடுக்கப்பட்ட சமீபத்திய சர்வே ஒன்றில், இந்த 'சுதந்திர வாகனம்' போராட்டத்திற்கு எதிராக நாட்டில் 62% பேர் உள்ளனர். அதுமட்டுமின்றி நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு தகுதி உள்ளவர்களின் மக்கள் தொகையில் 79 சதவிகிதத்தினர் ஏற்கனவே இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுவிட்டனர் என்று கூறுகிறது.