ஏஞ்சலினா திரைப்பட வாழ்க்கை:
ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று இருப்பவர் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி. 47வயதான அவர் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த லுக்கிங் டூ கெட் அவுட் என்கிற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதைதொடர்ந்து, 1993ம் ஆண்டு வெளியான சைபார்க் திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாபத்திரத்தில் நடிக்க தொடங்கினார். ஜார்ஜ் வாலஸ், ஜியா ஆகிய திரைப்படங்கள் மூலம் முன்னணி நாயகியாக உருவெடுக்க, லாரா கிராப்ட்: டாம்ப் ரைடர் மற்றும் மிஸ்டர் & மிசஸ் ஸ்மித் ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்தி தந்தது. கேர்ள், இன்டர்ரப்டட் படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளார்.
மனிதாபிமான சேவைகள்:
இளைஞர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட பேரழகு, திரைப்படத்துறையில் பெற்ற வெற்றிகள் ஆகியவை அவருக்கு புகழை தேடி தந்த நிலையில், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் சிறப்பு தூதராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டது ஏஞ்சலினா ஜோலிக்கு சமூகத்தில் நன்மதிப்பையும் பெற்று தந்தது. 60 க்கும் மேற்பட்ட களப்பணிகளை மேற்கொண்டுள்ள அவர், கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக லட்சக்கணக்கான அகதிகளின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
ஐ,நா.,வில் இருந்து விலகிய ஏஞ்சலினா:
இந்நிலையில் தான், அகதிகளுக்கான சிறப்பு தூதர் பதவியில் இருந்து விலகுவதாக ஏஞ்சலினா ஜோலி அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், ஐ.நா. அமைப்பில் 20 வருடங்கள் பணியாற்றிய பிறகு, அகதிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுடன் நேரடியாக ஈடுபடவும், தீர்வுகளுக்கான அவர்களின் வாதத்தை ஆதரிப்பதற்காகவும், வித்தியாசமாக வேலை செய்ய வேண்டிய நேரம் இது என்று உணர்கிறேன். வரும் ஆண்டுகளில் அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்த பிற மக்களுக்கு ஆதரவாக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என ஏஞ்சலினா குறிப்பிட்டுள்ளார்.
ஏஞ்சலினாவிற்கு பாராட்டு:
துன்பங்கள், நம்பிக்கை மற்றும் நெகிழ்ச்சியின் கதைகளுக்கு சாட்சியாக ஜோலி அயராது உழைத்துள்ளார் என்றும், அவரது பல தசாப்த கால சேவை, அவரது அர்ப்பணிப்பு, அகதிகள் மற்றும் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களுக்காக அவர் செய்த சேவைகளுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் எனவும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையம் பாராட்டியுள்ளது.
வாழ்க்கையை மாற்றிய டாம்ப் ரெய்டர்:
கம்ப்பொடியாவில் டாம்ப் ரெய்டர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் உலகளாவிய மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து ஜோலி தனிப்பட்ட முறையில் முதன்முதலில் அறிந்து கொண்டார். அதைதொடர்ந்து சர்வதேச பிரச்னைக் களங்கள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு அவர், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தை அணுகினர். அதைதொடர்ந்து, தான்சானியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கனிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்து அங்கிருந்த அகதிகளுக்கு தொண்டாற்றினார். அதன் பின் ஜெனிவாவில் உள்ள ஐநா அகதிகளுக்கான அமைப்பின் தலைமையகத்தில் ஆகஸ்டு 27, 2001 அன்று அவ்வமைப்பின் நல்லெண்ண தூதராக ஜோலி அறிவிக்கப்பட்டார். தொடர்ந்து 30க்கும் அதிகமான நாடுகளில் அகதிகள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த மனிதர்களை சந்தித்திருக்கிறார். அவர்களுக்கான நிதி உதவி அளித்து பல்வேறு சேவைகளையும் செய்து ஏஞ்சலினா ஜோலி தொண்டாற்றியுள்ளார்.