சவூதி அரேபியாவில் ரயில் ஓட்டுநர் பணிக்காக பெண் ஓட்டுநர்கள் தேவை என்று வெளியிடப்பட்டிருந்த விளம்பரம் சுமார் 28 ஆயிரம் விண்ணப்பங்களை ஈர்த்துள்ளது. பழமைவாதமான அரசாகக் கருதப்படும் சவூதி அரேபியாவில் பெண்களின் வேலை வாய்ப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு ஏற்பட்டுள்ள முக்கியமான மாற்றமாக இது பார்க்கப்படுகிறது. 


கடந்த பிப்ரவரி 16 அன்று, ஸ்பெயினைச் சேர்ந்த ரயில்வே நிறுவனமான ரென்ஃபே இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து வருகிறது. விண்ணப்பம் செய்துள்ள பெண்களின் கல்வித் தகுதி ஆன்லைனின் சரிபார்க்கப்பட்டு, அவர்களது ஆங்கில மொழிப் புலமையும் சோதனையிடப்படும். இதனால் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை சுமார் பாதியளவு குறையும் எனவும், எஞ்சியிருக்கும் விண்ணப்பங்கள் மீது வரும் மார்ச் மாத இறுதிக்குள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் எனவும் ரென்ஃபே நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இந்தப் பணிக்காக 30 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் மெக்கா, மதினா ஆகிய நகரங்களுக்கு இடையில் புல்லட் ரயில்களை இயக்குவர். இதற்கு முன்பாக அவர்களுக்கு ஒரு ஆண்டு முழுவதும் சம்பளத்துடன் பயிற்சி வழங்கப்படும். 



தங்கள் தொழில்களின் பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் வழங்குவதாகக் கூறும் ரென்ஃபே நிறுவனம் தற்போது அதன் ரயில்களை இயக்குவதற்காக சவூதி அரேபியாவில் 80 ஆண்களை நியமித்துள்ளது. மேலும், 50 ஆண்கள் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 


சவூதி அரேபியாவில் பெண்களுக்கான பணிகள் ஆசிரியர்கள், மருத்துவர்கள் என்பதாக மட்டும் இருந்த நிலையில், சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு வரை, சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


கடந்த 5 ஆண்டுகளில் சவூதி அரேபியாவின் தொழிலாளர்களுள் பெண்களின் பங்கேற்பு சுமார் இரண்டு மடங்காக மாறி, 33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. சவூதி அரேபியாவின் முடி இளவரசர் நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்கத் திட்டமிட்டிருப்பதால், முன்பு ஆண்களுக்கும், வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் மட்டுமே ஒதுக்கப்பட்டு வந்த பணிகள் தற்போது அந்நாட்டின் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 



கடந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டின் போது வெளியிடப்பட்ட தரவுகளில், சவூதி அரேபியாவில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் பாதியாக இருப்பதாகவும், 34.1 சதவிகிதம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களின் வேலையின்மை சதவிகிதம் மூன்று மடங்கு அதிகம் எனவும், சுமார் 21.9 சதவிகிதமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 


சவூதி அரேபியாவின் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் மேற்கு நாடுகளால் தோண்டி எடுக்கப்படுவதால், அந்நாடு பெண்கள் முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டுகளில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட பெண்ணுரிமை செயற்பாட்டாளர்கள் மீது ஒடுக்குமுறை, கடந்த 2018ஆம் ஆண்டு ஊடகவியலாளர் ஜமால் கஷோகி படுகொலை முதலான விவகாரங்களால் சவூதி அரேபியா மீது மேற்கின் பார்வை பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.