கம்போடியாவில் 11 வயது சிறுமி ஒருவர் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு பறவை காய்ச்சல் மனித தொற்று ஏற்பட்டுள்ளது என கம்போடியா சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  


கிராமப்புற ப்ரே வெங் மாகாணத்தைச் சேர்ந்த சிறுமிக்கு H5N1 வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர் ஒரு வாரத்திற்கு முன்பு அதிக காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். கம்போடியாவின் சுகாதார அமைச்சகம், அவரது தந்தையும் H5N1 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 11 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வியாழனன்று, சுகாதார அமைச்சர் மாம் புன்ஹெங், 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு கம்போடியாவில் H5N1 விகாரத்தின் முதல் அறியப்பட்ட மனித தொற்று இது என்று கூறினார். 


சிறுமி தனது கிராமத்திலிருந்து தலைநகர் புனோம் பென்னில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவர் அங்கு கொண்டு செல்லப்பட்ட சிறுது நேரத்தில் உயிரிழந்தார். சிறுமியின் கிராமத்திற்கு அருகில் இருந்து இறந்த பல பறவைகளின் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். இறந்த அல்லது நோய்வாய்ப்பட்ட பறவைகள் அருகில் செல்லவோ அல்லது தொடவோ கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.  கம்போடியாவில் கடைசியாக 2014 இல் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. 2014ஆம் ஆண்டில், H5N1 நோய்த்தொற்றினால் 56 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 37 பேர் உயிரிழந்தனர். பறவைக் காய்ச்சல் மனிதர்களை தாக்குவது அரிதான ஒன்று. ஏனெனில் மனிதர்களின் தொண்டை, மூக்கு மற்றும் மேல் சுவாசக் குழாய்களில் வைரஸ் பாதிப்பு ஏற்படும் சூழல் மிகவும் குறைவு. நோய்வாய்ப்பட்ட கோழிகள் அல்லது பறவைகள் இடையே வேலை செய்பவர்கள் நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.


 சீனா, இந்தியா, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் 2021ஆம் ஆண்டிலிருந்து 8 பேருக்கு H5N1 வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.   வைரஸின் புதிய மாறுபாடு தீவிரமாக இருப்பதாகவும் அதிகம் பரவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 2021ஆம் ஆண்டு தொடங்கிய இந்த பறவைக்காய்ச்சலின் தொற்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 விலங்குகள் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு இந்த மாத தொடக்கத்தில் கூறுகையில் 42 மில்லியன் உள்நாட்டு மற்றும் காட்டுப் பறவைகளில் பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளது. கோழி உட்பட கிட்டத்தட்ட 15 மில்லியன் உள்நாட்டு பறவைகள் இந்த நோயால் இறந்துள்ளன, மேலும் நோய் பரவுதலை தடுக்க 193 மில்லியனுக்கும் பறவைகள் அழிக்கப்பட்டன. மிங்க்ஸ் மற்றும் நீர்நாய் போன்ற பாலூட்டிகளையும் இந்த வைரஸ் தாக்கியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில், வைரஸ் மனிதர்களிடையே பரவக்கூடிய வடிவத்தில் மாறுகிறதா என்பதைப் பார்க்க "தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்" என்று கூறியது.