இஸ்ரேல்-காசா இடையேயான போரை நிறுத்த தீவிர முயற்சி மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சமீபத்தில் 20 அம்ச திட்டத்தை முன்மொழிந்ததோடு, அதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக அறிவித்து, ஹமாசிற்கு கெடுவும் விதித்திருந்தார். இந்நிலையில், இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தி, அதில் 53 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா என்ற சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது.

இஸ்ரேல்-காசா போர்; ட்ரம்ப்பின் முயற்சி வீணா.?

இஸ்ரேலுக்கும், காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பிற்கும் இடையே, சுமார் 2 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் 20 அம்ச அமைதித் திட்டம் ஒன்றை முன்மொழிந்தார் ட்ரம்ப். அதன் பிறகு,  வெள்ளை மாளிகைக்கு சென்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ட்ரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், தனது திட்டத்திற்கு நெதன்யாகு ஒப்புக்கொண்டதாகவும், மற்ற இஸ்லாமிய நாடுகளும் ஒப்புக்கொண்ட நிலையில், ஹமாஸின் பதில் மட்டுமே மீதமுள்ளதாக அறிவித்தார். அதோடு, ஹமாஸ் அமைப்பிற்கு 4 நாட்கள் கெடுவும் விதித்த நிலையில், ஹமாஸ் திட்டத்தை நிராகரித்து, பல திருத்தங்களை கோரியது.

ஹமாசிற்கு கெடு விதித்து எச்சரிக்கும் ட்ரம்ப், தொடர் தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேலை மட்டும் எதுவும் கூறவில்லை. இந்நிலையில், நேற்றும் காசா மீது தாக்குதல் நடத்தி 53 பேரை இஸ்ரேல் கொன்றுள்ளதால், ட்ரம்ப்பின் முயற்சிகள் பலிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இஸ்ரேலின் இரட்டை நிலைப்பாடு

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒருபுறம் அமைதிக்கான பேச்சுவார்த்தையை நடத்தினாலும், காசா மீதான தாக்குதலை நிறுத்தவே இல்லை. வெள்ளை மாளிகையில் அவர் ட்ரம்ப்பை சந்தித்த அதே வேளையில், காசாவில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. அதில் பலர் உயிரிழந்தனர்.

மேலும், காசாவில் தொடர்ந்து முழு மூச்சில் தாக்குதல் நடைபெறும் என்றும், அதனால் அங்கு உள்ள மக்களை தெற்கு காசா பகுதிக்கு சென்றுவிடுமாறு இஸ்ரேல் எச்சரித்தது. இதன் மூலம், பேச்சுவார்தை ஒருபுறமும், தாக்குதல் ஒருபுறமும் என இந்த போரில் இரண்டை நிலைப்பாட்டை இஸ்ரேல் கொண்டுள்ளது வெளிப்படையாக தெரிகிறது.

நேற்றும் தாக்குதல் நடத்தி 53 பேரை கொன்ற இஸ்ரேல்

இப்படிப்பட்ட சூழலில், நேற்றும் காசாவில் பல இடங்களில் தனது தாக்குதலை தொடர்ந்துள்ளது இஸ்ரேல். அந்த தாக்குதல்களில் 53 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு காசாவில், உதவித் தொகுப்பு வாகனத்தை இடைமறித்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில், உதவிக்காக காத்திருந்த பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதேபோல், மத்திய நகரான டெய்ர் அல் பலாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, இஸ்ரேலின் தொடர் தாக்குதலால், அமைதி முயற்சி கடினமாகிவிடும் என்று அஞ்சப்படுகிறது. ஹமாசிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப், தற்போது இஸ்ரேலின் இந்த செயலுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை.