ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்த வேண்டும் என்று ட்ரம்ப் தொடர்ந்து கூறிவருவது மட்டுமல்லாமல், அதற்காக அபராதமாக 25 சதவீதம் கூடுதல் வரியையும் விதித்துள்ளார். இந்த நிலையில், இந்தியா மற்றும் பிதமர் மோடி குறித்து பேசியுள்ள ரஷ்ய அதிபர் புதின், இந்தியா உடனான நட்பு ஸ்பெஷலானது என்று கூறியுள்ளதுடன், பிரதமர் மோடி ஒரு புத்திசாலியான தலைவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். அதே சமயம், அமெரிக்காவையும் சாடியுள்ளார். அவர் பேசியது குறித்து தற்போது பார்க்கலாம்.

அவமானகரமான முடிவை இந்தியா எடுக்காது - புதின்

ரஷ்யாவின் கருங்கடல் ரிசார்ட் நகரமான சோச்சியில் நேற்று வால்டாய் மன்ற கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் அந்நாட்டு அதிபர் புதின் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, இந்தியா தங்களது எரிசக்தி வளங்களை விட்டுக்கொடுத்தால் சில இழப்புகளை சந்திக்கும் என தெரிவித்தார்.

அதன் மதிப்பீடுகள் வேறுபடுவதாக கூறிய அவர், சிலர் அந்த இழப்பு 10 பில்லியன் டாலர்கள் வ இருக்கலாம் என்று கூறுவதாகவும், அதே சமயம், ரஷ்யாவிடம் தொடர்ந்து எரிசக்தியை வாங்குவதன் மூலம் அமெரிக்காவின் தடைகள் மூலம் ஏற்படும் இழப்பு அதே அளவில் தான் இருக்கும் என்று தெரிவிப்பதாகவும் கூறினார்.

இப்படி இருக்கையில், உள்நாட்டு அரசியல் செலவுகளையும் அது சுமந்தால், அதை ஏன் மறுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.

“மோடி சமநிலையான, புத்திசாலியான தலைவர்“ - புதின் புகழாரம்

மேலும், இந்தியா தங்களை யாரும் அவமானப்படுத்த அனுமதிக்காது என்று கூறிய புதின், “பிரதமர் மோடியை நான் நன்றாக அறிவேன், அவரும் அத்தகைய முடிவுகளை எடுக்க மாட்டார்“ என்று தெரிவித்தார்.

அதோடு, பிதமர் மோடி ஒரு “சமநிலையான, புத்திசாலியான மற்றும் தேசிய நோக்குடைய தலைவர்“ என்றும் புகழாரம் சூட்டினார்.

மேலும், இந்தியாவும் ரஷ்யாவும் சோவியத் யூனியன் காலத்திலிருந்தே ஒரு ஸ்பெஷலான உறவை பகிர்ந்து கொள்வதாக குறிப்பிட்ட புதின், இந்தியாவில் உள்ள மக்கள் அதையும், தங்கள் உறவுகளையும் மறந்துவிடுவதில்லை என்று தான் நம்புவதாக தெரிவித்தார்.

அதோடு, இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வை ஒப்புக்கொண்ட புடின், அதை குறைக்க, ரஷ்யா இந்தியாவிலிருந்து அதிக விவசாயப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்கலாம் என்று கூறினார்.

அமெரிக்காவிற்கு கண்டனம்

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா மற்றும் அதன் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்கா ரஷ்யாவிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வாங்குவதாகவும், அதே வேளையில், மற்ற நாடுகள் ரஷ்ய எரிசக்தி பொருட்களை வாங்குவதை நிறுத்துமாறு அழைப்பு விடுப்பதாகவும் புதின் சாடினார்.

வர்த்தக பங்காளிகள் மீதான அதிக வரிகள் உலகளாவிய விலைகளை உயர்த்தக்கூடும் என்று கூறியதுடன், அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை அதிகமாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என்றும் புடின் குறிப்பிட்டார்.