அதிவேகமாகப் பரவும் இந்திய இனவகைக் கொரோனா வைரஸால் பிரிட்டனில் இதுவரை 2300 பேர் பாதிக்கபப்ட்டுள்ளதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. இதுவரை அங்கே 86 மாவட்டங்களில் இந்திய இனவகைப் பரவியதற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.மேலும் கடந்த திங்கள் வரை மட்டும் அங்கே 2,323 இந்திய இனவகை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக போல்டன் மற்றும் ப்ளாக்பர்ன் பகுதிகளில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது என அந்த நாட்டு சுகாதாரச் செயலாளர் ஹேன்காக் தெரிவித்துள்ளார்.
மக்களை தடுப்பூசி போடச்சொல்லி வலியுறுத்தியுள்ள அவர், ‘தடுப்பூசி நமக்கு நம்பிக்கை அளிக்கும் என்றாலும் புதிய இனவகைகள் நாம் மேற்கொள்ளும் அத்தனை முயற்சியையுமே பாழ்படுத்திவிடுபவை. வைரஸ் எந்த உருவத்தில் வந்தாலும் அதனை எச்சரிக்கையுடன் இருந்து ஒடுக்கவேண்டும்’என்றுள்ளார். ஜூன் 21ல் தளர்த்திக்கொள்வதாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் கொரோனா தொற்று அதிகரித்ததன் காரணமாக அங்கே நீட்டிக்கப்பட்டிருக்கிறது.தடுப்பூசி போடுவதும் ஐம்பது வயதுக்கு மேலானவர்களுக்கும் உடல் ரீதியான பிற பாதிப்புகள் இருப்பவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து செலுத்தப்பட்டுவருகிறது. மேலும் லாக்டவுன் நீட்டிக்கப்படும் என்றாலும் அந்த நாட்டிலிருந்து போர்ச்சுகல், இஸ்ரேல் போன்ற குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றன. பாகிஸ்தான்., பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து இங்கிலாந்து வருபவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.