இலங்கைக்கு இக்கட்டான சூழ்நிலையில் உடனடியாக இந்தியா உதவியதற்கு சர்வதேச உதவி நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர் நன்றி தெரிவித்துள்ளார்.


இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த அதேவேளை சீனா இலங்கைக்கு கடன் கொடுத்து வலையில் சிக்க வைத்ததை சமந்தா பவர்  விமர்சித்து இருக்கிறார்.சீனா இலங்கைக்கு வழங்கிய லாப நோக்கமற்ற கடன் உதவியினால் இலங்கையை கடன் வலையில் சிக்க வைத்துள்ளதாகவும் 2000 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு சீனா கடன் வழங்குவதில் முன்னணியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
 
இந்தியா ஏற்கனவே 16 மில்லியன் அமெரிக்க டாலர்களை , மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது என சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய மேலும் 3.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனை இலங்கைக்கு இந்தியா வழங்கியதை குறிப்பிட்டு அவர் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.சீனாவிடம் இருந்து இலங்கை பெற்றுள்ள வெளிப்படையற்ற கடன்கள் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் மூலம் இலங்கை  கடுமையான  நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதாக  சமந்தா பவர் மேலும் கூறியுள்ளார்.


சீனாவின் கடனுதவியில் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை விமான நிலையம் மற்றும் துறைமுகம் என்பன லாபம் இல்லாத திட்டங்களாக இருப்பதாக சமந்தா பவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சீனா கொடுத்த  கடனும் ஒரு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இருக்கும் கடனை அடைக்க அதிக கடன்களை வழங்காமல் ,ஒரு சலுகை காலத்திற்கு ஏற்ப மட்டும் கடனை மறுசீரமைப்பதற்கான ஒப்பந்தத்தை அமைப்பதே சீனாவிற்கு சிறந்தது என சமந்தாபவர் தெரிவித்திருக்கிறார்.


இலங்கை தனது மொத்த கடன் சுமையில் 15 சதவீதத்தை சீனாவுக்கு வழங்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.ஆகவே சீனாவின் நடவடிக்கைகளில் தான் இலங்கையின் எதிர்கால பொருளாதாரம் தங்கி இருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.