Sri Lanka: இறுதிப்போரில் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள் எங்கே என தமிழ் தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்வி இலங்கை நாடாளுமன்றத்தையே அதிர வைத்துள்ளது. 


இலங்கையில், இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2009ல் நடைபெற்ற இறுதிப் போரின் போது லட்சக்கணக்கான  அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த இறுதிப்போரில் கலந்து கொண்ட விடுதலைப் புலிகள் உட்பட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என பாரபட்சம் இல்லாமல் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இறுதிப் போருக்குப் பின்னர் இலங்கையில் தமிழர்கள் மற்றும் சிங்கள மக்களிடையே முழுமையான சுமூகமான சூழல் ஏற்படவில்லை. 


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில், இலங்கைத் தமிழர்கள், சிங்கள மக்கள் என அனைவரும் இணைந்து ஆளும் அரசினை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ராஜபக்சே குடும்பம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்டது. தற்போது இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கேவின் அரசின் மீதும் மக்களுக்கு பெரும் நம்பிக்கை இல்லை. மீண்டும் மக்களிடையே ஒன்றுபட்ட போராட்டம் நிகழாமல் இருக்க,  இலங்கையில் அவசர காலச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த ரணில் விக்ரமசிங்கே அரசு திட்டமிட்டு வருகிறது. இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்  இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.


அவர் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி, 


நாட்டில் அவசர கால சட்டத்தை மீண்டும் திணிப்பதற்கு இன்று விவாதம் நடைபெறுகிறது, ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அன்று தமிழ் மக்களை, தமிழ் இளைஞர்களை கைது செய்து அடைப்பதற்காகத்தானே  இந்த அவசர கால சட்டம் கொண்டு வரப்பட்டது, இன்றைக்கு அவசர காலச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த இந்த அரசு ஏன் முயற்சிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும், இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டனர். பலரைக் காணவில்லை. அவர்களை எங்கே கொன்று புதைத்தீர்கள் என தற்போதைய அரசு பதில் சொல்ல வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் உடனடியாக அளிக்கப்படவில்லை.  இவரின் இந்த கேள்வி, இலங்கை நாடாளுமன்றத்தையே அதிர்வுரச் செய்துள்ளது. 


மேற்கொண்டு பேசிய அவர்,  தப்போது இந்த ஆட்சியாளர்கள் யார் என தமிழ், சிங்கள மக்கள் நன்கு உணர்ந்து விட்டார்கள், இந்தச் சட்டத்தால் தமிழ் மக்கள் மட்டும் அல்ல சிங்கள மக்களும் தற்போது பாதிக்கப்பட்டு வருவதாகவும்  சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல், இன்றும் இலங்கையில் காணாமல் போனோரின் உறவுகள் வீதியில் இறங்கி தமது உறவினர்கள் எங்கே என கேட்டு கதறும் காட்சிகள் அரங்கேறி வருவதும்  குறிப்பிடத்தக்கது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண