வெளிநாட்டு கப்பல்கள் இலங்கை வர நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
உளவுக் கப்பல்:
சீனக் கடற்படையின் யுவான் வாங்-5 கடந்தாண்டு இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தது. இது ஆராய்ச்சி கப்பல் என கூறப்பட்டாலும், உளவுக் கப்பலாகவும் செயல்படும் என பல்வேறு தரப்பினராலும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்நிலையில் தான், யுவான் வாங் - 5 கப்பலை தொடர்ந்து ஷி யான் 6 எனும் சீனாவின் ஆராய்ச்சி கப்பல் அடுத்த மாதம் இலங்கை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின் போது, தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்துடன் (NARA) இணைந்து ஆய்வுகளை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பாக இந்தியா ஏற்கனவே தனது நிலைப்பாட்டை தெரிவித்த நிலையில், தற்போது அமெரிக்க அரசும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க சொல்வது என்ன?
அதன்படி, ஐ.நா. பொதுசபையின் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை, அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் விக்டோரியா நுலாண்ட் சந்தித்து பேசினார். அப்போது சீன கப்பலால் இலங்கை மட்டுமின்றி அண்டை நாடான இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என தனது கவலையை நூலண்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு விளக்கம்:
இதுதொடர்பாக இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”இலங்கை ஒரு நடுநிலையான நாடு என்ற வகையில், வெளிநாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்கள் இலங்கையில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதில் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நடைமுறையை வகுத்துள்ளதாக விக்டோரியாவிடம், அலி சப்ரி விளக்கமளித்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிலைப்பாடு முக்கியம்..!
சீன கப்பல் இலங்கை வரும் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக, இலங்கை அமைச்சர் அலி சப்ரி ஏற்கனவே விளக்கமளித்துள்ளார். அதன்படி, ”எனக்கு தெரிந்தவரை, அக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு வருவதற்கு சீன கப்பலுக்கு நாங்கள் அனுமதி வழங்கவில்லை. பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. ஆனால், சட்டபூர்வமான இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான நிலைப்பாடு எங்களுக்கு மிக மிக முக்கியமானவை. நாங்கள் எப்போதும் எங்கள் பிராந்தியத்தை அமைதி மண்டலமாக வைத்திருக்க விரும்புகிறோம்” என தெரிவித்து இருந்தார்.
இந்தியா சொல்வது என்ன?
சீனாவின் இந்த ஆராய்ச்சி கப்பல்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் வகையில், கடல் படுக்கையை வரைபடமாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. அதோடு, இந்தியாவின் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளையும் அந்த கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், இலங்கை துறைமுகத்தில் சீன கப்பல் நிறுத்தப்படுவது குறித்து இந்தியா தனது பாதுகாப்பு நிலைப்பாடுகளை அவ்வப்போது வெளிப்படுத்துகிறது. இதுதொடர்பாக பேசியிருந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அண்டை நாடுகளில் நடைபெறும் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான எந்தவொரு நடவடிக்கை தொடர்பாகவும், அறிந்துகொள்ள நாங்கள் ஆர்வம் காட்டுவோம் என கூறியிருந்தார்.