Joe Biden On Israel Palestine War:  ஹமாஸ் அமைப்பினரால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த 4 வயது சிறுமி, இஸ்ரேலில் பாதுகாப்பாக இருப்பதாக அதிபர் பைடன் தெரிவித்துள்ளார்.


காஸாவில் போர் நிறுத்தம்:


கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதோடு, ஏராளமானோர் சிறைபிடிக்கப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் வகையில் ஹமாஸ் அமைப்பு முற்றிலும் அழிக்கப்படும் என கூறி, இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் கைவசம் உள்ள காஸா அமைப்பின் மீது மும்முனை தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அத்தியாவசிய பொருட்கள் கூட இன்றி தவித்தனர். இந்த சூழலில் தான் அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் எடுத்த முயற்சியின் பேரில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் 4 நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.


விடுவிக்கப்படும் பணயக் கைதிகள்:


போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி, தங்கள் வசம் இருந்த 13 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 4 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதேபோன்று ஒவ்வொருகட்டமாக பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து வருகின்றனர். அதில் அமெரிக்காவைச் சேர்ந்த 4 வயது சிறுமியும் அடங்கும். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் இருந்த பாலஸ்தீனியர்கள் 39 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர். 






ஜோ பைடன் பேச்சு:


அமெரிக்க சிறுமி விடுவிக்கப்பட்டது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் பைடன், “அபிகல் எய்டன் எனும் அந்த சிறுமி எதிர்கொண்ட சூழலை நினைத்துக் கூட பார்க்க முடியாது. தற்போது ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி கடந்த 3 நாட்களாக அங்கு போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 58 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைதிகள் விடுவிக்கப்படும் வரை இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் நீடிக்கும் என நம்புகிறேன். பணயக் கைதிகள் அனைவரும் வீடு திரும்பும் வரை எங்களது முயற்சிகள் தொடரும்” என பைடன் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் இலக்கு என்ன?


பைடன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களின் நீண்ட கால பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க ஒரே வழி இரு நாடுகளின் தீர்வு. இஸ்ரேலியர்களும், பாலஸ்தீனியர்களும் சமமான சுதந்திரம் மற்றும் கண்ணியத்துடன் வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த இலக்கை நோக்கி செயல்படுவதை நாங்கள் கைவிட மாட்டோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.