Pneumonia: சீனாவில் நிமோனியா காய்ச்சல் மிக தீவிரமாக பரவி வருவதை அடுத்து, இந்தியாவில் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கொரோனாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டன. அனைத்து நாடுகளில் கொரோனாவில் உயிரிழப்புகளும் அதிகமாகவே இருந்தன. இந்த கொரோனாவால் நாடுகளின் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டன.  அந்த நேரத்தில் மக்களை காப்பாற்றியது கொரோனா வேக்சின் தான். விரைவாக அனைத்து நாடுகளிலும் வேக்சின் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், தற்போது ஒரு பூகம்பம் சீனாவில் வெடித்துள்ளது.


சீனாவில் தீவிரமாக பரவும் நிமோனியா காய்ச்சல்:


அதாவது, சீனாவில் மாணவர்களுக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெய்ஜிங் மற்றும் லியோனிங் மாகாணத்தில் நிமோனியா பாதிப்பு அதிகமாக இருக்கிறது.  நிமோனியா பாதிப்பால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளில் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிமோனியா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிமோனியா காய்ச்சலால் இதுவரை எந்த உயிரிழப்பு ஏற்படவில்லை. 


பொதுவாக நிமோனியா என்பது நுரையீரலைப் பாதிக்கும் தொற்று நோயாகும். நிமோனியா காய்ச்சல் ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு நுரையீரலையும் பாதிக்கலாம். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். மேலும், சளி, காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். ஆனால், தற்போது சீனாவில் பரவி வரும் தொற்றானது, காய்ச்சல் மற்றும் நுரையீரல் எரிச்சல் ஆகியவை முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. அதே நேரத்தில் அங்கு யாருக்கும் இருமல் பாதிப்பில்லை. ஆனால், காய்ச்சல் காரணமாக சீனாவில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. 


உலக சுகாதார அமைப்பு சொல்வது என்ன?


இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், "பெய்ஜிங் மற்றும் லையானிங் பகுதிகளில் புதிய நோய் கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இது ஏற்கனவே அறியப்பட்ட  நோய்கிருமிகளால் ஏற்படும் சுவாச நோய்களில் பொதுவான அதிகரிப்பு தான்.  சீனாவில் தற்போதைய சூழலை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். சீனாவில் உள்ள தேசிய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம். அதோடு, தடுப்பூசிகள், நோய்வாய்ப்பட்டவர்களின் இருந்து விலகி இருப்பது மற்றும் முகக் கவசம் அணிவது போன்ற நடவடிக்ககைளை  பின்பற்ற வேண்டும்" என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.


மத்திய  அரசு அறிவுறுத்தல்:


சீனாவில் அதிகரித்து வரும் நிமோனியா காய்ச்சல் குறித்து மத்திய அரசு கூறுகையில், " சீனாவில் குழந்தைகளுக்கு ஏற்பட்ட H9N2 பாதிப்பு குறித்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். சீனாவில் பதிவாகியுள்ள பறவைக் காய்ச்சல் மற்றும் சுவாச நோய்களின் பாதிப்பு இந்தியாவில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் எந்த வித சிக்கல் ஏற்பட்டாலும் அதனை சமாளிக்க இந்தியா தயாராக இருக்கிறது” என்று மத்திய அரசு தெரிவித்துள்து.