அமெரிக்காவில் ராட்சத ராட்டினத்தில் இருந்து சிறுவன் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் கடந்த வியாழன் இரவு மிசோரியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் 430 அடி உயர த்ரில் சவாரியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


உயிரிழந்த சிறுவன் மிசூரியின் செயின்ட் லூயிஸ் பகுதியைச் சேர்ந்த டயர் சாம்ப்சன் (வயது 14) என அடையாளம் காணப்பட்டுள்ளார். விடுமுறையில் இருந்த சாம்சன் நண்பரின் குடும்பத்துடன் நகரத்திற்குச் சென்றிருந்தார். அங்குள்ள ஐகான் பூங்காவில் இரவு 11 மணியளவில் 430-அடி உயரமான ஆர்லாண்டோ ஃப்ரீஃபால் என்ற ராட்சத ராட்டினத்தில் சவாரி செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.




இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு பார்வையாளர் படம்பிடித்ததாகக் கூறப்படும் வீடியோவில், ராட்டினத்தில் இருந்து சிறுவன் விழுவதைக் காணலாம்.  உடனே அருகில் இருந்தவர்கள் அலறி துடித்தனர். இது விபத்தா இல்லையா என்பதை அறிய விசாரணை நடந்து வருவதாகவும், சவாரியின் பாதுகாப்பு குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


"ஆர்லாண்டோ ஃப்ரீஃபால் சவாரி 30 பேர் இருக்கைகள் கொண்டது. ராட்டினம் உச்சியை அடைந்தவுடன், அது 30 டிகிரி முன்னோக்கி சாய்ந்து, சிறிது நேரம் தரையை எதிர்கொள்ளும், அதற்கு முன் 75 மைல் வேகத்தில் 400 அடி உயரத்தில் விழும்" என்று ஐகான் பார்க் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"எங்கள் விருந்தினர்களில் ஒருவரின் உயிரைப் பறித்த சம்பவத்தால் நாங்கள் மனம் உடைந்துள்ளோம். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இரங்கலையும் ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். நாங்கள் ஷெரிப்  ஊழியர்களுடன் முழு விசாரணை செய்து வருகிறோம்” என்று அந்தப் பூங்காவில் இயக்குநர் கூறினார்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண