Continues below advertisement

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் புதிய H-1B விசா கொள்கை, வெளிநாட்டு தொழிலாளர்களை நீண்டகாலமாக சார்ந்து இருப்பதற்கு பதிலாக, திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களை தற்காலிகமாக அமெரிக்காவிற்கு அழைத்து வந்து, அமெரிக்கர்களுக்கு உயர்திறன் வேலைகளுக்கு பயிற்சி அளிப்பதாகும் என்று  அந்நாட்டின் கருவூல செயலாளர் ஸ்காட் பெசன்ட் கூறியுள்ளார். அமெரிக்கா சில துறைகளுக்கு வெளிநாட்டு திறமையாளர்களைக் கொண்டுவர வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தியுள்ள நிலையில், இவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

ஸ்காட் பெசன்ட் கூறியது என்ன.?

பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசன்ட், H-1B விசாக்களுக்கான ட்ரம்பின் புதிய அணுகுமுறையை, அமெரிக்காவின் உற்பத்தியை மீட்டெடுக்கும் நோக்கில் "அறிவு பரிமாற்ற" முயற்சி என்று கூறினார். பல தசாப்தங்களாக, அவுட்சோர்சிங்கிற்குப் பிறகு அமெரிக்க உற்பத்தித் துறையை மீண்டும் கட்டியெழுப்புவதே இந்த புதிய அணுகுமுறையின் நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 20-30 ஆண்டுகளாக, துல்லியமான செய்யப்பட வேண்டிய உற்பத்தி வேலைகளை வெளிநாடுகளுக்கு கொடுக்கவில்லை என்று கூறிய அவர், ஒரே இரவில் எல்லாம் நடந்துவிடும் என்று சொல்ல முடியாது என்றும், செமிகன்டக்டர் தொழிலை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டுவர விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும்,  அதற்காக அரிசோனாவில் பெரிய வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அதனால், அமெரிக்க தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க 3, 5 அல்லது 7 ஆண்டுகள் திறன்களைக் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்களை அழைத்து வருவதுதான் ட்ரம்ப்பின் தொலைநோக்குப் பார்வை என்று தான் நினைப்பதாகவும், அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளித்த பின்னர் அவர்கள் வீட்டிற்குச் செல்லலாம்.. அதைத்  தொடர்ந்து அமெரிக்க தொழிலாளர்கள் பொறுப்பேற்பார்கள் என்றும் ஸ்காட் பெசன்ட் தெரிவித்தார்.

H-1B விசா கொள்கை குறித்து ட்ரம்ப் கூறியது என்ன.?

அமெரிக்காவில், தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த ட்ரம்ப்பிடம், அவரது நிர்வாகம் H-1B விசாக்களை முன்னுரிமைப்படுத்த திட்டமிட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ​​"நீங்கள் திறமையை கொண்டு வர வேண்டும்" என்று கூறினார். அதற்கு, "எங்களிடம்(அமெரிக்கர்கள்) நிறைய திறமை இருக்கிறது" என்று தொகுப்பாளர் விவாதித்தார். ஆனால் அதற்கு, "இல்லை, உங்களிடம் இல்லை" என ட்ரம்ப் பதிலளித்தார். மேலும், "உங்களிடம் குறிப்பிட்ட திறமைகள் இல்லை. வேலையின்மை கோட்டிலிருந்து மக்களை நீக்கிவிட்டு, நான் உங்களை ஒரு தொழிற்சாலையில் சேர்க்கப் போகிறேன், மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று ட்ரம்ப் கூறினார்.

குடியேற்ற சீர்திருத்த நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக, H-1B விசா திட்டத்தை ட்ரம்பின் நிர்வாகம் விமர்சித்த நிலையில், அவருடைய தற்போதைய கருத்துக்கள் வந்துள்ளன. செப்டம்பரில் ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பால், புதிய H-1B விசா விண்ணப்பங்களுக்கு 1 லட்சம் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சத்தை கட்டணமாக நிர்ணயித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.