பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடந்து வரும் போர் உலக அமைதிக்கு பெரும் சவால் விடுத்து வருகிறது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு நடத்திய தீடீர் தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


சக்தி வாய்ந்த உளவு அமைப்புகளை கொண்டுள்ள இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அந்நாட்டு வரலாற்றில் மோசமான தாக்குதலாக கருதப்படுகிறது. வலுவான உளவு அமைப்புகளை தாண்டி, தொழில்நுட்ப ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் இஸ்ரேல் பலம் வாய்ந்த நாடாக பார்க்கப்படுகிறது.


இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்துவதற்கு இந்தியா காரணமா? 


இப்படியிருக்க, இஸ்ரேல் அமைப்பு மீதான தாக்குதலை ஹமாஸ் எப்படி திட்டமிட்டிருக்கும்? அதை எவ்வாறு செயல்படுத்தியிருக்கும்? என்பது மர்மமாகவே இருந்து வருகிறது. 


இந்த நிலையில், இந்தியாவின் முன்முயற்சியில் உருவான ஒரு ஒப்பந்தம், இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகீர் கிளப்பியுள்ளார். அதுவேறு வேறு எதுவும் இல்லை, டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் போது, கையெழுத்தான இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தட ஒப்பந்தம்.


ஹமாஸ் தாக்குதலுக்கு இந்த ஒப்பந்தம் காரணமாக இருக்கலாம் என கூறிய அமெரிக்க அதிபர் பைடன், "ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம் என நான் உறுதியாக நம்புகிறேன். இதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை. ஆனால், அப்படிதான்  என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது. 


அமெரிக்க அதிபர் சொல்வது என்ன?


இஸ்ரேலை பிராந்திய அளவில் இணைப்பதற்கும் ஒட்டுமொத்த பிராந்தியத்தை இணைப்பதற்கும் நாம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் இந்த தாக்குதலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். அந்த பணியை விட்டுவிட முடியாது" என தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி ஆல்பனீசுடன் நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பைடன் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.


​​இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன. மேம்படுத்தப்பட்ட இ ப்பு வசதிகள் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த வழித்தடம் உத்வேகம் அளித்து ஊக்கப்படுத்தும்.  ஆசியா, மேற்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கு இடையே  பொருளாதாரத்தை ஒருங்கிணைக்க உதவும்.


இந்த ஒப்பந்தத்தின் கீழ் இரண்டு வழித்தடங்கள் உருவாக்கப்படும். கிழக்கு வழித்தடம், இந்தியாவை மேற்கு ஆசியா/மத்திய கிழக்குடன் இணைக்கும். அதேபோல, வடக்கு வழித்தடம் மேற்கு ஆசியா/மத்திய கிழக்கை ஐரோப்பாவுடன் இணைக்கும். ரயில்கள், சாலைகள், துறைமுகங்கள் மூலம் ஒட்டுமொத்த பிராந்தியத்தை இணைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.


இதையும் படிக்க: "எந்த உலகுத்தல வாழுறீங்க" பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஐநா தலைவர்.. கொந்தளித்த இஸ்ரேல்