உலக வல்லரசான அமெரிக்காவை அடுத்து ஆளப்போவது யார்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அமெரிக்க  அதிபர் தேர்தல், வரும் நவம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது.


எதிர்பார்ப்பை எகிற வைத்த அமெரிக்க அதிபர் தேர்தல்:


தற்போது, அதிபராக உள்ள ஜோ பைடன், அடுத்த தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துவிட்டார். குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிட்ட உள்ளதாக அறிவித்திருந்தார்.


இருவருக்கும் சொந்த கட்சியில் செல்வாக்கு இருப்பதால் ஜனநாயக கட்சியின் சார்பில் பைடனும் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்பும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனவே, கடந்த 2020ஆம் அதிபர் தேர்தலை போல், இருவரும் நேருக்கு நேர் மோதுகின்றனர். 


தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், ஒருவர் மீது ஒருவர் சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். பைடனுக்கு 81 வயதாவதால், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர் நல்ல நிலையில் உள்ளாரா? என குடியரசு கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


சிக்கலாக மாறிய பைடனின் வயது:


குறிப்பாக, பல நேர்காணல்களில் பெயர்களை மாற்றி குறிப்பிட்டது, நடக்கும்போது கீழே தவறி விழுவது, நினைவுகளை மறப்பது என பைடனின் உடல்தகுதி குறித்து பலர் கேலி செய்து வருகின்றனர்.


டிரம்புக்கும் தனக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது என்றும், தான் முழு உடல்தகுதியுடன் இருப்பதாகவும் விமர்சனங்களுக்கு பைடன் பதிலடி அளித்து வருகிறார். இந்த நிலையில், டிரம்ப்க்கு தன்னுடைய மனைவி பெயரே நியாபகம் இருக்காது என பைடன் கடுமையாக சாடியுள்ளார்.


என்.பி.சி. செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளர் சேத் மேயர்ஸ் உடனான நேர்காணலில் பேசிய பைடன், "நீங்கள் மற்றொரு நபரை (டிரம்ப்) பார்க்க வேண்டும். அவர் என்னைப் போலவே வயதானவர். நம்பர் 1, அவரது மனைவியின் பெயர் கூட அவருக்கு நினைவில் இல்லை. நம்பர் 2, உங்கள் யோசனைகள் எவ்வளவு பழையவை என்பதைப் பற்றியது" என்றார்.


தனது மனைவியின் பெயரை டிரம்ப் தவறாக குறிப்பிட்டார் என சொல்லப்படும் நேர்காணலில், தனது முன்னாள் மனைவியை குறிப்பிட்டாரா? அல்லது உண்மையிலேயே தனது மனையவின் பெயரை தவறாக குறிப்பிட்டாரா? என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. 


என்பிசி வெளியிட்ட கருத்துக்கணிப்பில், பைடனின் வயது குறித்து ஜனநாயக கட்சியினர் உள்பட மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆனால், அதிலும் பாதி பேர்தான், டிரம்பின் வயது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.


இதையும் படிக்க: Donald Trump: தெற்கு கரோலினா மாகாணத்தில் டிரம்ப் வெற்றி! அதிபர் வேட்பாளர் ஆகிறாரா?