விபத்துகளை தவிர்க்க தொழில்நுட்பங்கள் எவ்வளவோ மேம்படுத்தப்பட்டாலும், புதுப்புது காரணங்களால் விபத்துகள் நிகழ்ந்துகொண்டே தான் உள்ளன. குறிப்பாக பொதுப்போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும், விமானப்போக்குவரத்தில் அவ்வப்போது நிகழும் விபத்துகள் உலகையே சோகத்தில் ஆழ்த்துகின்றன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 5:40 மணியளவில் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டர் விமான நிலையத்தில் இருந்து, மோன்ட்கோமெரி விமான நிலையத்திற்கு ஒற்றை இன்ஜின் கொண்ட Mooney M20J எனும் சிறிய விமானம் புறப்பட்டுள்ளது. மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள மோன்ட்கோமெரி நகரை நெருங்கியபோது, விமானத்தை தரை இறக்குவதற்காக குறைந்த உயரத்தில் விமானி ஓட்டியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், அங்கு இருந்த உயர்மின் கோபுரத்தின் மீது மோதியுள்ளது. அந்த வேகத்தில் விமானத்தின் முன்பகுதி உயர்மின் கோபுரத்தில் சிக்கிக்கொள்ள, அது கீழே விழாமல் 100 அடி உயரத்தில் தொங்கியவாறு இருந்துள்ளது. இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் தடைபட்டது. வீடுகள், தெருக்கள் அனைத்தும் இருளில் மூழ்கின.
விபத்து தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதி முழுவதும் மின்சாரத்தை துண்டித்து மீட்பு பணிகளை தொடங்கினர். இதனால், 1.17 லட்சம் பேர் பல மணி நேரம் மின்சாரம் இன்றி அவதிக்கு ஆளாகினர்.
இதனிடையே, சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, விமானத்தில் சிக்கியிருந்த லூசியானாவைச் சேர்ந்த பயணி ஜான் வில்லியம்ஸ் (66) மற்றும் வாஷிங்டன், டி.சி.யைச் சேர்ந்த பைலட் பேட்ரிக் மெர்க்லே (65) ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து உயர்மின் கோபுரத்தில் சிக்கியுள்ள விமானத்தை, தரையிறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதோடு, விபத்தால் மின் இணைப்பில் வேறு ஏதேனும் கோளாறு நிகழ்ந்துள்ளதா என்பதை ஆராய்ந்த பிறகே மின் இணைப்பு வழங்கப்படும் என, மேரிலாண்ட் மாகாண மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஒரு சில பகுதிகளில் தற்போது மின்சார சேவை சீரடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கான காரணம் தொடர்பாக, விமானப்போக்குவரத்து துறை சார்பில் விசாரணையும் மேற்கொள்ளப்பட உள்ளது.