நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் சூழலில், பாகிஸ்தான் தொடர்பாக பாஜக தலைவர்கள் பேசுவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில், பாஜக மூத்த தலைவரும் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 


பரபரப்பை கிளப்பிய ராஜ்நாத் சிங் கருத்து:


பாகிஸ்தானில் புகுந்து பயங்கரவாதிகளை கொல்வோம் என அவர் கூறியிருந்தார். சில நாள்களக்கு முன்பு பிரதமர் மோடியும் இதே போன்றதொரு கருத்தை தெரிவித்திருந்தார். கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் புகுந்து 20 பயங்கரவாதிகளை இந்திய புலனாய்வு அமைப்பை சேர்ந்தவர்கள் கொன்றதாக தி கார்டியன் சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது.


தனியார் செய்தி நிறுவனத்துடனான நேர்காணலின்போது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய அவர், "அண்டை நாட்டிலிருந்து வரும் பயங்கரவாதிகள் பாரதத்தில் அமைதியை குலைக்க முயன்றாலோ அல்லது பாரதத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட முயன்றாலோ அவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம். பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்கு ஓடிவிட்டால், அவர்களைக் கொல்ல பாகிஸ்தானுக்குள் நுழைவோம்" என்றார்.


"இந்திய, பாகிஸ்தான் பிரச்னைக்கு நடுவே வர மாட்டோம்"


பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங்கின் கருத்து தொடர் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்கா இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளது. பிரச்னை கை மீறி போவதை தவிர்த்து, பேச்சுவாரத்தையின் மூலம் தீர்வு காண இந்திய, பாகிஸ்தான் நாடுகளை ஊக்குவிக்கிறேன் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் நேற்று தெரிவித்துள்ளார்.


செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக விரிவாக பதில் அளித்த மேத்யூ மில்லர், "நான் முன்பே கூறியது போல் அமெரிக்கா இந்த பிரச்னைக்கு நடுவே வரப் போவதில்லை. ஆனால், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் பிரச்னை தீவிரமடைவதைத் தவிர்க்கவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் நாங்கள் ஊக்குவிக்கிறோம்" என்றார்.


காலிஸ்தான் தீவிரவாதி பன்னூனை அமெரிக்காவில் வைத்து கொல்ல இந்திய சதி திட்டம் தீட்டியதாக அமெரிக்கா சமீபத்தில் குற்றச்சாட்டு முன்வைத்தது. அமெரிக்க குடிமகனான பன்னூனை கொல்ல முயற்சித்ததாக நிகில் குப்தா என்பவரை அமெரிக்க காவல்துறை காவலில் வைத்துள்ளது.


இந்தியா மீது பொருளாதார தடையா?


பன்னூன் கொலை முயற்சி விவகாரத்தில் இந்தியாவுக்கு பொருளா தடை விதிக்க அமெரிக்க திட்டமிட்டு வருகிறதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர், "யார் மீது தடை விதிப்போம் என்பதை முன்கூட்டியே சொல்ல முடியாது. ஆனால், தடைகள் தொடர்பாக நீங்கள் என்னைக் கேட்டால், நாங்கள் அதை பற்றி வெளிப்படையாக விவாதிக்க தயாராக இல்லை" என்றார்.


ராஜ்நாத் சிங் கருத்துக்களுக்கு பாகிஸ்தான் கடுமையாக எதிர்வினை ஆற்றியது. இதுதொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தந்த பதிலடியில், "மிகையான தேசியவாத உணர்வுகளை தூண்ட வெறுப்பு பேச்சு பேசுவது இந்திய அரசாங்கத்திற்கு வழக்கமாகிவிட்டது. எந்த வித கூச்ச நாச்சமும் இன்றி தேர்தல் ஆதாயத்திற்காக இம்மாதிரியான செயல்களை செய்கிறது" என விமர்சித்திருந்தது.