கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்கு எதிராக ரஷியா நடத்தி வரும் போரை காட்டிலும் பல மடங்கு தீவிரமான தாக்கத்தை இந்த போர் ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடந்து உக்ரைன் போரை காட்டிலும் அதிக எண்ணிக்கையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.


இது, மேற்காசியாவை மிக பெரிய நெருக்கடிக்கு தள்ளியுள்ளது. தாக்குதலை ஹமாஸ் தொடங்கியிருந்தாலும், அதற்கு பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் போர் மீறல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். 


கொத்து கொத்தாக உயிரிழக்கும் அப்பாவி மக்கள்:


இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் கொத்து கொத்தாக உயிரிழக்கும் அப்பாவி மக்களை காப்பாற்றுவதற்காக பாலஸ்தீன மருத்துவ பணியாளர்கள் பலர், பல இன்னல்களை தாண்டி வேறு எங்கும் செல்லாமல் காசா அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர். போரின் விளைவாக காசா அகதிகள் முகாம்கள் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.


50,000 பேர், தஞ்சம் புகுந்துள்ள அகதிகள் முகாமில் 4 கழிவறைகள் மட்டுமே இருக்கிறது. 4 மணி நேரம் மட்டுமே தண்ணீர் கிடைக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. எப்போது வேண்டுமானாலும் குண்டு விழலாம் என்ற நிலையிலும், சக உயிர்களை காப்பாற்ற வேண்டும் என மகத்தான நோக்கத்திற்காக மருத்துவர்கள் இரவு பகல் பாராமல் சேவை செய்து வருகின்றனர்.


காசாவில் இருந்து மீட்கப்பட்ட அமெரிக்க செவிலியர் ஒருவர், காசா அகதிகள் முகாம்களில் நிலவும் நிலை குறித்து பல அதிர்ச்சி தகவல்களை சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் பகிர்ந்து கொண்டார். 


பாலஸ்தீனிய மருத்துவர்களின் மகத்தான பணி:


பத்திரிகையாளர் ஆண்டர்சன் கூப்பருக்கு செவிலியர் எமிலி காலஹான் அளித்த நேர்காணலில், "காசாவில் தங்கியிருக்கும் பாலஸ்தீனிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாங்கள் இறக்கப் போகிறோம் என்று தெரிந்தாலும் காசாவிலேயே தங்க முடிவு செய்துள்ளனர். அவர்கள் ஹீரோக்கள். இப்போது காசாவில் பாதுகாப்பான இடமே இல்லை" என்றார்.


எல்லைகள் இல்லாத மருத்துவர்கள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்காக பணியாற்றி வந்த எமிலி, கடந்த வாரம்தான் காசாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். இந்தவாரம், அமெரிக்காவுக்கு திரும்பியுள்ளார். வீட்டுக்கு திரும்பியிருப்பதை எப்படி உணர்கிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர், "நான் என் குடும்பத்துடன் வீட்டில் இருக்கிறேன். 


26 நாட்களில் முதல் முறையாக பாதுகாப்பாக உணர்கிறேன் என்பதில் எனக்கு ஒரு நிம்மதி உள்ளது. ஆனால், அதில் மகிழ்ச்சி எதுவும் இல்லை. ஏனென்றால், அங்கு மக்களை விட்டுவிட்டு வந்ததால்தான் இந்த பாதுகாப்பு எனக்கு கிடைத்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களால் 26 நாட்களில் சுமார் 5 முறை இடத்தை மாற்ற வேண்டியிருந்தது. 


35,000 பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். அங்கு குழந்தைகள் முகம், கழுத்து, கைகளில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் மிகவும் நிரம்பியிருப்பதால், அவர்கள் உடனடியாக டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர்" என்றார்.
     
பாலஸ்தீன காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை, 10,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள், பெண்கள் ஆவர். மருத்துவமனை, அகதிகள் முகாம் என அனைத்து பகுதிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.