அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் நபர் ஒருவர் பெண்ணை கொலை செய்து அவரின் இதயத்தை வெட்டி வெளியே எடுத்து, அதை அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு சமைத்து கொடுத்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சமீபத்தில், டெல்லியில் நடந்த ஷ்ரத்தா கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
ஷ்ரத்தா கொலை வழக்கின் அதிர்ச்சி அடங்குவதற்குள்ளேயே உத்தரப் பிரதேசத்திலும் மேற்கு வங்கத்திலும் அதே போன்ற கொலை, கொடூர சம்பவங்கள் அரங்கேறின.
ஐநா திடுக்கிடும் தகவல்:
இதற்கிடையே, ஐநா தலைவர் ஒரு அதிர்ச்சி தரவை பகிர்ந்து அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியது. அதாவது, ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/ சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது. அமெரிக்காவின் ஓக்லஹோமா மாகாணத்தில் ஒரு நபர், ஒரு பெண்ணைக் கொலை செய்து அவரின் இதயத்தை வெட்டி வெளியே எடுத்து, அதைத் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு சமைத்து கொடுத்துள்ளார்.
அமெரிக்காவில் அதிர்ச்சி:
கொடூரம் அதோடு நின்றுவிடவில்லை. சமைத்து கொடுத்துவிட்டு 4 வயது குழந்தை உள்பட இருவரை அவர் கொலை செய்துள்ளார். கொலை செய்தவரின் பெயர் லாரன்ஸ் பால் ஆண்டர்சன். இவருக்கு வயது 44. கடந்த 2021ஆம் ஆண்டு, இவர் இந்த கொடூர கொலைகளைச் செய்துள்ளார்.
கொலை செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் அவர் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் விடுவிக்கப்பட்ட சில வாரங்களிலேயே, ஆண்ட்ரியா பிளாங்கன்ஷிப் என்ற பெண்ணை கொலை செய்து, இதயத்தை வெட்டி வெளியே எடுத்துள்ளார்.
அதை தனது அத்தை மற்றும் மாமாவின் வீட்டிற்கு எடுத்துச் சென்று உருளைக்கிழங்குடன் சேர்த்து சமைத்துள்ளார். பின்னர், அந்த தம்பதிகளுக்கு அந்த உணவை பரிமாற முயன்றார். ஆனால், அதை சாப்பிட அவர்கள் மறுத்துள்ளனர்.
4 வயது குழந்தையை கொன்ற கொடூரம்:
இதனால், அவர்களை கடுமையாக தாக்கி 67 வயதான மாமா (லியோன் பை) மற்றும் அவரது 4 வயது பேத்தி கயோஸ் யேட்ஸ் ஆகியோரைக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
போதை பொருள் வழக்கில், 20 ஆண்டுகளுக்கு சிறை விதிக்கப்பட்ட லாரன்ஸ், ஓக்லஹோமா ஆளுநரின் உத்தரவின்பேரில் 3 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். ஆனால், பின்னர்தான் தெரிய வந்தது தவறான தகவலின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டார் என்பது. குற்றத்தை ஒப்பு கொண்டதையடுத்து, ஆண்டர்சனுக்கு 5 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஆண்டர்சன் தாக்கி காயமடைந்த அவரின் அத்தை மற்றும் பாதிக்கப்பட்ட மற்ற குடும்ப உறுப்பினர்கள், ஓக்லஹோமா கவர்னர் மற்றும் சிறை பரோல் வாரியத்திற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர்.