அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளை அமல்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த காலக்கெடு இதற்கு மேல் நீட்டிக்கப்படாது என அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹாவர்ட் லுட்னிக் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இதுவரை 5 நாடுகள் மட்டுமே அமெரிக்கா உடன் புதிய வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன. இதனால், இந்தியா உள்ளிட்ட ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க வர்த்தக செயலாளர் கூறியுள்ளது என்ன.?

பல்வேறு நாடுகளுக்கு, அமெரிக்க அதிபர் விதித்த வரிகளை அமல்படுத்துவது குறித்து நேற்று ஊடகம் ஒன்றில் பேசிய அமெரிக்க வர்த்தக செயலாளர் ஹாவர்ட் லுட்னிக், ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து, தனது வர்த்தக பங்குதாரர்களுக்கான கூடுதல் வரி விதிப்பில் அமெரிக்கா உறுதியாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு மேல் கால நீட்டிப்போ, சலுகை காலமோ கிடையாது என கூறியுள்ள லுட்னிக், ஆகஸ்ட் 1-ம் தேதியிலிருந்து பெறப்படவேண்டிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாகவும், சுங்கத்துறையினர் அதை வசூலிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், வரிவிதிப்பு ஒருபுறம் தொடர்ந்தாலும், வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து அனைத்து நாடுகளுடன் ட்ரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை, இங்கிலாந்து, வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், ஜப்பான் ஆகிய 5 நாடுகள் மட்டுமே வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் லுட்னிக் தெரிவித்துள்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகள்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விதித்த பரஸ்பர வரியை, வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு வசதியாக 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்திருந்தார். அந்த கால அவகாசம் கடந்த ஜூலை 9-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், கடைசி முறையாக என்று கூறி, இந்த மாத இறுதி வரை அந்த கால அவகாசத்தை நீட்டித்த ட்ரம்ப், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளாத அனைத்து நாடுகளிடமிருந்தும் வரி வசூல் தொடங்கும் என அறிவித்திருந்தார்.

இதற்கு மேல் கால நீட்டிப்பு செய்ய மாட்டேன் என கடந்த 9-ம் தேதி எச்சரித்த ட்ரம்ப், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 14 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு, ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 25 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்று தெரிவித்தார். ஏற்கனவே அறிவித்த நாடுகளுடன் சேர்த்து, கீழ்கண்ட 14 நாடுகளுக்கும் அதிக வரிகளை அவர் விதித்து அறிவித்திருந்தார்.

எந்தெந்த நாட்டிற்கு எவ்வளவு.?

  • தென்கொரியா - 25%
  • ஜப்பான் - 25%
  • மியான்மர் - 40%
  • லாவோஸ் - 40%
  • தென்னாப்ரிக்கா - 30%
  • கஜகஸ்தான் - 25%
  • மலேசியா - 25%
  • துனிசியா - 25%
  • இந்தோனேசியா - 32%
  • போஸ்னியா - 30%
  • வங்கதேசம் - 35%
  • செர்பியா - 35%
  • கம்போடியா - 36%
  • தாய்லாந்து - 36%

இந்த சூழலில், இந்த பட்டியலில் உள்ள சில நாடுகள் மட்டும் தற்போது ஒப்பந்தத்தை மேற்கொண்டுவிட்டதாக அமெரிக்க வர்த்தக செயலாளர் தெரிவித்துள்ள நிலையில், இந்த பட்டியலில் உள்ள நாடுகள் மற்றும் ஏற்கனவே வரிகள் அறிவிக்கப்பட்ட இந்தியா உள்ளிட்ட நாடுகளும், ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து கப்பம் கட்டியே ஆக வேண்டும். அதற்குள் இந்தியா ஒப்பந்தம் மேற்கொள்ளுமா.? அல்லது வேறு விதமாக இதை டீல் செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.