தாய்லாந்து - கம்போடியா இடையே எல்லைப் பிரச்னை தொடர்பாக கடந்த வியாழக்கிழமை(24.07.25) திடீரென மோதல் வெடித்த நிலையில், இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கி வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தலையீட்டால், அவ்விரு நாடுகளும் தற்போது மோதலை முடிவுக்கு கொண்டுவர தயார் என அறிவித்துள்ளன. இதைத் தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியது போலவே, தாய்லாந்து-கம்போடியா இடையேயான மோதலை நிறுத்துவதாக கூறி, மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் ட்ரம்ப். அவர் கூறியது என்ன.? பார்க்கலாம்.

“இந்தியா-பாகிஸ்தான் மோதலையே நிறுத்திட்டேன், இதெல்லாம் சாதாரணம்“

தாய்லாந்து - கம்போடியா மோதலை நிறுத்துவது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கம்போடியா பிரதமரிடம் தாய்லாந்து உடனான போரை நிறுத்துவதற்காக பேசியதாகவும், தாய்லாந்து தற்காலிக பிரதமரையும் அழைத்து போர் நிறுத்தம் குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இரு நாடுகளுடனும் அமெரிக்கா வர்த்தகம் செய்துவருவதாகவும், அவர்கள் தொடர்ந்து சண்டையிட்டால், அவர்களுடன் வர்த்தகம் செய்ய மாட்டோம் என்று கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதோடு, சிக்கலான சூழலை சாதாரணமாக மாற்ற முயல்வதாகவும், இந்த போரில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டு வருவதாகவும், இது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை தனக்கு நினைவுபடுத்துவதாகவும், அதை வெற்றிகரமாக நிறுத்தியதாகவும் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் இவ்வாறு பதிவிட்ட ட்ரம்ப், நேற்று அமெரிக்காவில், ஐரோப்பிய யூனியன் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை முடித்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தாய்லாந்து மற்றும் கம்போடியாவுடன் ஏராளமான வர்த்தகத்தை மேற்கொள்வதாகவும, அவர்கள் ஒருவரை ஒருவர் கொன்றுவருவது குறித்து அறிய வருவதாகவும், இந்தியா - பாகிஸ்தான் போரையே நிறுத்திய தனக்கு இது இவர்களது போரை நிறுத்துவது சுலபமான ஒன்றாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும், தாய்லாந்து, கம்போடியா பிரதமர்களை அழைத்து, போர் நிறுத்தம் மேற்கொள்ளாவிட்டால், இரு நாடுகளுடனும் வர்த்தகம் செய்ய மாட்டோம் என்று கூறியதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு தான் வேறு பணிக்கு சென்ற நிலையில், அவர்கள் போரை நிறுத்த விரும்புவது குறித்து தற்போது அறிவதாகவும் கூறியுள்ளார்.

அதோடு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஒருவரை ஒருவர் பயங்கரமாக தாக்கிக்கொள்ள தயாரானதாகவும், அந்த மோதலை, வர்த்தகத்தை வைத்து முடித்த நிலையில், வர்த்தகத்தால் இத்தகைய விஷயங்களை சாதிக்க முடிகிறது என்றால், அதனால் பெருமையடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒரு முறை இரு முறை அல்ல, ட்ரம்ப் இதுவரை கிட்டத்தட்ட 26 முறை இதுபோல் கூறிவிட்டார். பாகிஸ்தானுடன் ஏற்பட்ட சமாதானத்தில் ட்ரம்ப்பின் தலையீடு இல்லை என்று இந்தியா திட்டவட்டமாக மறுத்து வரும் நிலையில், மீண்டும் மீண்டும் இதுபோன்று கூறி சர்ச்சையில் சிக்கி வருகிறார் ட்ரம்ப். இதற்கு முடிவுதான் என்ன.?