Taiwan Parliament Fight: தைவான் நாடாளுமன்றத்தில் மசோதா ஒன்றை நிறைவேற்றும் விவகாரத்தில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.


தைவான் நாடாளுமன்றத்தில் மோதல்:


அரசாங்கத்தின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடுவதற்கு எம்.பிக்களுக்கு,  அதிக அதிகாரம் வழங்குவதற்கான மசோதா தைவான் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விவாதம் நடைபெற இருந்த நிலையில், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால், நாடாளுமன்ற அவையே களேபரமாக மாறியது.


உருண்டு புரண்ட எம்.பிக்கள்:


விவாதம் தொடங்குவதற்கு முன்பே உறுப்பினர்கள் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். பலர் மேசைகளுக்கு மேல் எழுந்து நின்று குதித்தனர்.  இதனிடையே, சக ஊழியர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் இருக்கைகளில் இருந்து கீழே இழுத்து தள்ளிக் கொண்டனர். இதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் அடித்து, உதைத்துக் கொண்டதோடு,  கீழே விழுந்து உருண்ரு புரண்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.



மசோதாவுடன் ஓடிய எம்.பி.,:


தடுக்க வந்த காவலர்களுடனும் எம்.பிக்கள் முட்டல் மோதலில் ஈடுபட்டனர். அவையில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.பி., மக்கள் கூட்டத்தின் மீது ஏறி மீண்டும் உள்ளே வர முயன்றார். அப்போது சில எம்.பிக்கள் அவரை இழுத்து தள்ளியதில் கீழே விழுந்து தலையில் காயமடைந்தார். இதனிடயே, மற்றொரு எம்.பி., புதியதாக தாக்கல் செய்யப்பட்ட சட்டமசோதாவின் நகலையே பறித்துக் கொண்டு, அவையிலிருந்து ஓடியுள்ளார். இந்த மோதல் சம்பவத்தால் நாடாளுமன்ற அவையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.






ஆட்சி அமைப்பதில் குழப்பம்:


பெரும்பான்மை இல்லாமலேயே ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லாய் சிங்-தே, வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ள சூழலில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. ஜனவரி தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் லாயின் DPP பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறவில்லை. எதிர்க்கட்சியான KMT DPP ஐ விட அதிக இடங்களைக் கொண்டுள்ளது, ஆனால் அது பெரும்பான்மையை பெற போதுமானதாக இல்லை. மேலும் TPP உடன் கூட்டணி அமைக்க முயல்கிறது.  இது பாராளுமன்றத்தின் 113 இடங்களில் 8 இடங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.


தைவான் ஒரு பரபரப்பான ஜனநாயக நாடு என்பதோடு, அந்நாட்டு பாராளுமன்றத்தில் அவ்வப்போது சண்டைகள் நடைபெறுவதும் வாடிக்கையாகியுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு முதல் அங்கு பல்வேறு மோதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.  2020 ஆம் ஆண்டில், KMT சட்டமியற்றுபவர்கள் அமெரிக்க பன்றி இறைச்சி இறக்குமதியை எளிதாக்குவது தொடர்பான தகராறில் அறையின் தரையில் பன்றி இறைச்சியை வீசியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2017ம் ஆண்டு நடைபெற்ற மோதலில் தண்ணீர் பலூன்களையும், நாற்காலிகளையும் தூக்கி வீசிக் கொண்டனர்.