அல்ஜீரியா நாட்டில் போரின் போது காணாமல் போனவர், 26 ஆண்டுகளுக்கு பின்பு, பக்கத்து வீட்டில் உள்ள பாதாள அறையில் உயிருடன் மீட்கப்பட்டார்.
அல்ஜீரியா உள்நாட்டு போரில் மாயம்:
1990 ஆம் ஆண்டு அல்ஜீரியா நாட்டில், அரசாங்கத்துக்கும், இஸ்லாமிய குழுக்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்றது. அப்போது, சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த காலத்தில், பின் ஓம்ரான் என்ற நபர் மாயமானார். இதையடுத்து, ஓம்ரானும் போர் சமயத்தில் இறந்ததாக குடும்பத்தினர் நம்பினர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு அரச அலுவலகத்திற்கு ஒரு புகார் வந்துள்ளது, அதில் பின் ஓம்ரான் என்னும் அடையாளம் தெரியாத நபர், பக்கத்து வீட்டுக்காரரின் ஆட்டு தொழுவத்தில், இருப்பதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, புகார் குறித்து விசாரணை மேற்கொள்ள அரசு வழக்கறிஞர் உத்தரவு பிறப்பித்தார்.
ஓம்ரான் மீட்பு:
இதையடுத்து, தேசிய பாதுகாப்பு படையினர் விசாரணையில் இறங்கினர். பின்னர் புகார் தெரிவித்த இடத்தில் சோதனை நடத்தியதில் , அங்கு 45 வயதுடைய நபர் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அவர் பின் ஓம்ரான் என்பதும், 26 ஆண்டுகளுக்கு முன்பு மாயமானவர் என்பதும் கண்டறியப்பட்டது. அவரை வீட்டில் அடைத்து வைத்த 65 வயதான பி.ஏ என்பவர் என கூறப்படுகிறது.
இதையடுத்து, ஓம்ரானை அடைத்து வைத்த நபர் தப்ப முயன்றார். ஆனால், அவரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
திரும்பி வந்தபோது தாயார் மரணம்:
பின்னர் ஒம்ரானை மீட்ட பாதுகாப்பு அதிகாரிகள், அவருக்கு மருத்துவ சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது , அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், பல ஆண்டுகளாக வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டதாகவும் , சில நேரங்களில் வீட்டில் உள்ள இடைவெளியில் இருந்து குடும்பத்தினரை பார்த்ததாகவும் தெரிவித்தார். ஆனால், அவர் என்மீது செலுத்திய மந்திரத்தின் காரணமாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து , அவருக்கு மனநல சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவரது தாயார் 2013 ஆம் ஆண்டே காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அறிந்த ஓம்ரான் பெரும் சோகமடைந்தார்.
உள்நாட்டு போரின்போது காணாமல் போனதாக நினைத்த நபர், தற்போது உயிருடன் மீட்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.