எத்தனை பேருக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது ஈழப்போரும்.. தமிழர்களின் மரணமும்... 


ஆண்டுதோறும் மே 18ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இலங்கை தமிழராலும், உலகத் தமிழராலும் ஆண்டு நினைவு நாளாக போற்றப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பது ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இறந்தவர்களை நினைவுப்படுத்தும் நாள். இதற்கு காரணம் கடந்த 2009 ம் ஆண்டு சரியாக 14 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் இலங்கையில் உள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவுற்றது. 


ஈழப்போர்: 


இலங்கையின் வடகிழக்கு பகுதியை தமிழீழம் என்னும் பெயரில் தனிநாடு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடந்த 1983 முதல் 2009 வரை ஈழத்தமிழர்களும், விடுதலை புலிகளும் போராட்டத்தில் ஈடுபட்டன.  இந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய போராக உருவெடுத்து ஈழத்தமிழர்கள் கொத்து கொத்தாக இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இதற்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அப்போதைய ஊடங்களில் வெளியாகி மிகப்பெரிய விவாதங்களை கிளப்பியது. 



அதிலும்,  கடந்த 2007 ம் ஆண்டு மட்டும் ஏறத்தாழ 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டனர். தொடர்ந்து 2008ம் ஆண்டு இறுதியிலும், 2009 ம் ஆண்டு தொடக்கத்திலும் இலங்கை ராணுவபடையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. தொடர்ந்து 2009 ம் ஆண்டு மே 18ம் தேதி விடுதலைப்புலிகளின் தலைவரை கொன்று விட்டதாக இலங்கை அரசு  புகைப்படம் வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து, இலங்கையின் வடகிழக்கு கரையில் உள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப்போர் முடிவு பெற்றது.


ஐநா கண்டனம்: 


இந்த போர் முடிவுற்றதற்கு பிறகு போரின் இறுதிக்கட்டத்தில் சுமார் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை இறந்ததாக ஐக்கிய நாடுகள் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. மேலும், இறந்தவர்களின் பெரும்பாலானோர் இலங்கை ராணுவத்தினரின் ஏவுகணை தாக்குதல்களாலும், கொடூர வக்கிர புத்தியினாலும் அகப்பட்டு இறந்ததாகவும் அந்த அறிக்கை குறிப்பிட்டு இருந்தது. தொடர்ந்து ஐநா இலங்கை அரசு இழைத்தாக தெரிவித்து போர்க்குற்றங்களை தற்போதுவரை விசாரித்தும் வருகிறது.