இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று காலை 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. நில அதிர்வு மையத்தின்படி, இந்த நிலநடுக்கம் அதிகாலை 12:57 மணிக்கு உணரப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தின் ஆழம் 190 கிலோமீட்டராக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.  






நில நடுக்கம்:


உலகம் முழுவதும் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது. குறிப்பாக கடந்த மாதம், ஆப்கானிஸ்தான் நாட்டில் 6.1 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் எதிரொலித்தது. கடந்தாண்டு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கத்திலேயே மிக மோசமானதாகும்.


மேலும், 2024 ஆம் ஆண்டு தொடங்கிய முதல் நாளிலேயே, ஜப்பான் மத்திய பகுதியில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் ஜனவரி 23 ஆம் தேதி, சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோயில் 7.2 ஆக இருந்துள்ளது. நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்ததால், அதன் அதிர்வு டெல்லி - என்சிஆர் வரை உணரப்பட்டது. நிலநடுக்கமானது நேபாளம் - சீனா எல்லையை ஒட்டிய பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் உள்ள மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.