Alaska Airlines Window : அமெரிக்காவில் நடுவானில் விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தபோது, அதன் கதவு பலத்த காற்றில் அடித்து செல்லப்பட்டதை தொடர்ந்து, ஒரேகான் மாகாணத்தில் அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.


சமீப காலமாக, விமானத்தில் தொடர்ந்து சர்ச்சை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஏர் இந்தியா விமானத்தில் வயதான பெண் பயணி மீது சக பயணி ஒருவர், சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பிரச்னையாக மாறி, விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கும் அளவுக்கு சென்றது. இந்த சம்பவத்தின் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக விமான பணிப்பெண்ணிடம் பயணி ஒருவர் அத்துமீறிய சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்தது.


நடுவானில் பரபரப்பு:


இந்த நிலையில், அமெரிக்காவில் மற்றுமொரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம், நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, பலத்த காற்றில் அதன் கதவு அடித்து செல்லப்பட்டது. இதையடுத்து, ஒரேகான் மாகாணத்தில் அந்த விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.


பலத்த காற்றில் விமானத்தின் கதவு அடித்து செல்லப்பட்டதை தொடர்ந்து, விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் அதை புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார். அதில், விமானத்தின் ஓரத்தில் கதவே இல்லாமல் காட்சி அளிக்கிறது. இந்த சம்பவத்தில் யாருக்காவது காயம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை.


பலத்த காற்றில் அடித்து செல்லப்பட்ட விமானத்தின் கதவுகள்:


இதுகுறித்து அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "போர்ட்லேண்டிலிருந்து கலிபோர்னியாவில் உள்ள
ஒன்டாரியோக்கு புறப்பட்ட உடனேயே ஒரு சம்பவத்தை எதிர்கொண்டோம். 171 பயணிகள், 6 விமான குழுவினருடன் போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. என்ன நடந்தது என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்" என குறிப்பிட்டுள்ளது.


 






இதுதொடர்பாக விசாரித்து வருவதாக அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியமும் தெரிவித்துள்ளது. கதவு அடித்து செல்லப்படும்போது, அந்த விமானம் 16,000 அடி (4,876 மீட்டர்) உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. பின்னர், அந்த உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது.


கடந்தாண்டு அக்டோபர் 1ஆம் தேதிதான், இந்த விமானம், அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த நவம்பர் 11ஆம் தேதி, வர்த்தக சேவைக்கு விடப்பட்டது.