சோமாலியா கடல் பகுதியில் 15 இந்தியர்கள் உள்பட 21 பேர் சென்ற சரக்கு கப்பலை கொள்ளையர்கள் கடத்தி சென்ற நிலையில், அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.  


அரபிக்கடலில் கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்:


அரபிக்கடலில் கடற்கொள்ளையர்களின் அட்டூழியம் அதிகரித்து வருவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன் கூட மால்டோவா நாட்டுக்கு சொந்தமான எம்வி ருயின் என்ற சரக்கு கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


இந்த சரக்கு கப்பலில் 18 மாலுமிகள் பயணித்தனர். இதனைத் தொடர்ந்து ஏடன் வளைகுடாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய போர் கப்பல், ஐரோப்பிய யூனியன் கடற்படை விரைந்தது. இந்த சம்பவத்தில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டார். 


இப்படிப்பட்ட சூழலில், சோமாலியா கடல் பகுதியில் கடத்தப்பட்ட 'எம்வி லீலா நோர்ஃபோக்' என்ற சரக்குக் கப்பலின் நிலையை இந்திய கடற்படை உன்னிப்பாகக் கண்காணித்து வந்தது. நேற்று மாலை தான்,  கப்பல் கடத்தப்பட்டுள்ளது.  லிபிரியா கொடியுடன் சென்ற அந்த கப்பலில் உள்ள 15 இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நிலைமையை கண்காணிக்கவும் இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சென்னை கடத்தப்பட்ட இடம் நோக்கி விரைந்தது. 


கடத்தப்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்ட கடற்படை:


கடத்தப்பட்டவர்களை மீட்க கடல் ரோந்து விமானம், ஹெலிகாப்டர்கள், விமானங்கள், MQ9B ட்ரோன்கள் ஆகியவற்றை இந்திய கடற்படை களத்தில் இறக்கியது. தொடர் முயற்சிக்கு பிறகு, இந்தியர்கள் உள்பட கடத்தப்பட்ட அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.


இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சரக்கு கப்பலில் இறங்கிய எலைட் கமாண்டோக்களான மார்கோஸ்
படைப்பிரிவினர், அரபிக்கடலில் உள்ள கப்பலில் இறங்கி 15 இந்தியர்களை மீட்டனர். கப்பலில் இறங்கியபோது, அதில் கடத்தல்காரர்கள் யாரும் இல்லை என்றும் கமாண்டோக்கள் உறுதி செய்துள்ளனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


 






இது தொடர்பாக இந்திய கடற்படையின் செய்தி தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், "கப்பலில் இருந்த 15 இந்தியர்கள் உள்பட 21 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கப்பலில் கடத்தல்காரர்கள் இல்லாததை மார்கோஸ் கமாண்டோக்கள் உறுதி செய்துள்ளனர். இந்திய கடற்படையின் கடல் ரோந்து விமானம், கடற்படை போர்க்கப்பல் மூலம் கடற்கொள்ளையர்களால் கடத்தல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டிருக்கலாம்" என்றார்.