ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் ஹானெடா விமான நிலையம் அமைந்துள்ளது. இது அந்நாட்டில் உள்ள பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று. தற்போது புத்தாண்டு விடுமுறை விடப்பட்டிருப்பதால் பொதுமக்கள் ஏராளமானோர் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் JAL 516 என்ற விமானம் ஷின் சிடோசே விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு ஹானெடா விமான நிலையத்திற்கு வந்தது. இது தரையிரங்கும் போது திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
விமானத்தின் அடியிலிருந்து தீ வரும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த JAL 516 விமானம் ஹனிடா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்பு அங்கிருந்த வேறொரு விமானத்தின் மீது மோதியிருக்கலாம் என்று NHK தெரிவித்தது. விமானத்தில் 379 பயணிகள் மற்றும் விமான குழு இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகள் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், பயணிகள் விமானம் மோதிய மற்றொரு விமானம் கடற்படைக்கு சொந்தமானது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 6 பேர் இருந்ததாகவும், ஒருவர் தப்பிய நிலையில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நிலநடுக்கம், சுனாமி:
ஜனவரி 1 ஆம் தேதி இந்திய நேரப்படி பகல் 12.40 மணிக்கு ஜப்பானில் முதல் நிலநடுக்கம் பதிவானது. நோட்டோ தீபகற்பத்தில் இஷிகாவா மாகாணத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதன் தாக்கம் 7.6 ரிக்டராகப் பதிவானது. மேலும் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டன. அவை 3.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவுகள் வரை பதிவாகின.
அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் அதிகபட்சமாக இஷிகாவா மாகாணத்தின் வாஜிமா துறைமுகத்தில் 1.2 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழுந்தன. இந்நிலையில், நேற்று சுனாமி எச்சரிக்கையை அரசு வாபஸ் பெற்றது.
இருந்தபோதிலும் கடல் மட்டத்தில் சில மாற்றங்கள் இருப்பதால், மக்கள் கடல் சார் பணிகளை சில நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் நிகாடா, டோயோமா, புகுயி, கிஃபு மாகாணாங்களில் உயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுவர30- பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுவதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. புத்தாண்டின் முதல் நாளே சுனாமி, நிலடுக்கம் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் இன்று விமானம் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.