கடந்த 16 மாதங்களாக, உக்ரைன் போர் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி  வரும் நிலையில், அதில் திடீர் திருப்பமாக ரஷியா ஆதரவு கூலிப்படை ரஷியா அரசுக்கு எதிராகவே திரும்பியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரிஷிய நாட்டு ராணுவ தலைமையை கவிழ்க்க போவதாக வாக்னர் கூலிப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.


முதலில் வாக்னர் கூலிப்படை என்றால் யார், அவர்களின் பணி என்ன, அதிகாரமிக்க ரஷிய ராணுவத்திற்கு எதிராக அவர்கள் திரும்பியது ஏன் என்பது குறித்து கீழே காண்போம்.


வாக்னர் கூலிப்படை - யார் இவர்கள்?


பிஎன்சி வாக்னர் எனப்படும் வாக்னர் கூலிப்படை, ரஷிய நாட்டின் துணை ராணுவ அமைப்பாகும். சட்டத்திற்கு அப்பாற்பட்டு வேலை செய்து வருகிறது. அடிப்படையில், இது ஒரு தனியார் ராணுவ அமைப்பாகும். கூலிப்படையினரை கொண்டு இயங்கி வருகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷிய சார்பு பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளிக்கும் போது இந்த குழு முதலில் 2014இல் அடையாளம் காணப்பட்டது.


கடந்த 2014ஆம் ஆண்டில், பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலேயே இந்த  ரகசிய அமைப்பு இயங்கி வந்தது. இந்த குழுவில் ரஷியாவின் உயரடுக்கு படைப்பிரிவுகள் மற்றும் சிறப்புப் படைகளைச் சேர்ந்த சுமார் 5,000 போராளிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.


இந்த சூழலில், உக்ரைன் போரில் வாக்னர் கூலிப்படையால் இப்போது 50,000 போராளிகள் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர் என்றும் உக்ரைன் விவகாரத்தில் ரஷியாவின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது என்றும் ஜனவரி மாதம் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள பக்முட் நகரை ரஷியா கைப்பற்றியதில் வாக்னர் குழு முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. கொடூரமாகவும் இரக்கமற்றும் செயல்படுவதில் பிரபலம் அடைந்துள்ளது வாக்னர் கூலிப்படை.


மத்திய ஆப்பிரிக்க குடியரசு, லிபியா மற்றும் மாலி உட்பட ஆப்பிரிக்கா முழுவதும் வாக்னர் கூலிப்படையினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக மேற்கத்திய நாடுகளும் ஐ.நாவும் குற்றம் சாட்டி வருகிறது.


ரஷியாவுக்கு எதிராக வாக்னர் கூலிப்படை திரும்ப காரணம் என்ன?


கடந்த ஜனவரி மாதம், உக்ரைனில் டொனெட்ஸ்க் பகுதியில் உப்புச் சுரங்க நகரமான சோலேடரை ரஷியா கைப்பற்றியது. இந்த நகரை தாங்களே கைப்பற்றினர் என்றும் வாக்னர் குழுவின் வெற்றியை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் பறிக்க நினைப்பதாகவும் வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் குற்றம்சாட்டினார்.


பாக்முட் நகரை கைப்பற்றுவதற்கு வாக்னருக்கு போதுமான வெடிமருந்துகளை வழங்க ரஷிய ராணுவம் தவறிவிட்டதாகவும், தனது ஆட்களை வெளியேற்றிவிடுவோம் என்றும்  வாக்னர் கூலிப்படை பலமுறை குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைனில் வாக்னர் கூலிப்படையினர் என்று கூறப்படும் துருப்புக்கள் ஒரு வீடியோவை பதிவு செய்தனர். அதில், தங்களுக்கு வெடிமருந்துகளை வழங்கத் தவறியதாக ரஷிய ராணுவத்தின் ஜெனரல் ஸ்டாஃப் ஜெனரல் வலேரி ஜெராசிமோவ் மீது அவர்கள் குற்றம்சாட்டினர்.


மாஸ்கோவை நோக்கி படையெடுப்பு:


பொதுவாக, ரஷியாவில் அந்நாட்டு ராணுவத்தை யாரும் அவ்வளவு எளிதாக விமர்சித்துவிடமுடியாது. இப்படி, இறுக்கமான அரசியல் சூழலை கொண்ட ரஷியாவில் அந்நாட்டு ராணுவ அமைச்சர் மீதும் ராணுவ தலைமை மீதும் வாக்னர் கூலிப்படை தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது முன்னெப்போதும் நடந்திராத ஒன்று.


இந்நிலையில், ரஷியா ராணுவ தலைமையை கவிழ்க்கும் நோக்கில் மாஸ்கோவை நோக்கி வாக்னர் கூலிப்படை படையெடுத்திருப்பதாக வாக்னர் கூலிப்படை தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்துள்ளார். இது, ரஷியாவில் உள்நாட்டு போருக்கு வித்திட்டுள்ளது.