கோகோயினை மீண்டும் கோகோ கோலாவில் சேர்க்க போவதாக எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். இதன் மூலம் கோகோ கோலாவை எலான் மஸ்க் விலைக்கு வாங்க போகிறாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
கடந்த மாதம் ட்விட்டரின் 9 சதவீத பங்குகளை வாங்கினார். இதன் மூலம் ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் குழு உறுப்பினராக இணைவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், நிர்வாக போர்டு உறுப்பினர் குழுவின் இணைய மறுத்த எலான், இன்றைய தேதிக்கு ட்விட்டரை விலைக்கு வாங்கிவிட்டார். கடந்த சில ஆண்டுகளாக ட்விட்டருக்கு இந்தியா மற்றும் அமெரிக்காவில் கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டது. இந்நிலையில்தான் ட்விட்டரை வாங்குவதற்கு சில நிறுவனங்கள் போட்டிப் போட்டுகொண்டு வந்தன. ஆனால், இறுதியில் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்கிவிட்டார்.
ட்விட்டரில் கருத்துச் சுதந்திரம் இல்லை எனச் சொல்லி வந்த எலான் மஸ்க் தற்போது ட்விட்டரில் பல்வேறு புதுவித மாற்றங்களை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் எலான் போட்ட மற்றொரு ட்வீட் தற்போது புது எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. அது கோகோ கோலா தொடர்பானது. 'அடுத்து நான் கோகோ கோலாவை வாங்க போகிறேன். கோகோயினை மீண்டும் கோகோ கோலாவில் சேர்க்க போகிறேன்' எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார். இதன் மூலம் கோகோ கோலாவை எலான் மஸ்க் விலைக்கு வாங்க போகிறாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. ஏற்கெனவே ஜாலியாக பேசிக்கொண்டிருப்பதைப் போல ட்விட்டரில் அரட்டை அடித்துக்கொண்டே அதற்கு ஓனராகிவிட்டார் எலான். அதேபோல் தற்போது கோகோ கோலா குறித்து பதிவிட்டுள்ளார். இதன் அடுத்தக்கட்டம் என்னவென்று இணையவாசிகள் ஆவலுடன் பல்வேறு யூகங்களை பதிவிட்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, ட்விட்டர் தொடர்பாகவும் ட்வீட் செய்துள்ளார் எலான், அதில், ''ட்விட்டரில் என்ட் டு என்ட் என்க்ரிப்ஷன் இருக்க வேண்டும், எனவே உங்கள் செய்திகளை யாரும் உளவு பார்க்கவோ அல்லது ஹேக் செய்யவோ முடியாது. பொதுநம்பிக்கை ஏற்படும் வகையில் அரசியல் ரீதியாக ட்விட்டர் நடுநிலையுடன் இருக்க வேண்டும். நடுநிலை என்றால் தீவிர வலதுசாரியோ, தீவிர இடதுசாரியோ கோபப்படுவார்கள்'' எனக் குறிப்பிடுள்ளார்.
முன்னதாக ட்விட்டர் குறித்து பதிவிட்ட எலான், 'சுதந்திரமான பேச்சு என்பது ஜனநாயகம் செயல்படுவதற்கான அடிப்படையான ஒன்று. டிவிட்டர் என்பது ஒரு டிஜிட்டல் ஸ்பேஸ், மனிதர்களின் எதிர்காலம் குறித்து விவாதிக்க வேண்டிய ஒன்று. ட்விட்டரில் பல புதிய மாற்றங்களை கொண்டுவரவே அதை வாங்கினேன். ட்விட்டர் அசாதாரணமான ஒன்று. நிறுவனத்துடனும் புதிய அப்டேட்களை மேற்கொள்ள ஆவலாக இருக்கிறேன். இந்த புதிய சிறப்புகள் ட்விட்டர் பயன்களுக்கு கிடைக்க ஒன்றிணைந்து செயல்படுதை எதிர்நோக்கி இருக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.