2016ம் ஆண்டு எகிப்து விமானம் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த 66 பேரும் இறந்தனர். தற்போது விமானம் விபத்துக்குள்ளானதன் காரணம் கண்டறியப்பட்டுள்ளது. விமானியின் சிகரெட்டினால் ஏற்பட்ட காக்பிட் தீயினால் விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. MS804 என்ற அந்த விமானத்தின் விமானி காக்பிட்டில் சிகரெட்டைப் பற்ற வைத்ததால், அவரது எமர்ஜென்சி மாஸ்க்கில் இருந்த ஆக்ஸிஜன் வாயு கசிந்து விமானம் பற்றி எரியக் காரணமாக இருந்தது என்று பிரெஞ்சு விமானப் போக்குவரத்து நிபுணர்களின் அறிக்கை தெரிவித்துள்ளது.
134 பக்கங்கள் கொண்ட அதிகாரப்பூர்வ அறிக்கை கடந்த மாதம் பாரிஸில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. எகிப்திய விமானிகள் காக்பிட்டில் தவறாமல் புகைபிடிப்பதாகவும், விபத்து நடந்த போது அந்த நடைமுறையை விமான நிறுவனம் தடை செய்யவில்லை என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.






இத்தாலிய செய்தித்தாள் Corriere della Seraவும் இதுபற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ஏர்பஸ் ஏ320 ரக விமானம் 2016ம் ஆண்டு மே மாதம் பாரிஸில் இருந்து கெய்ரோ நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் மர்மமான சூழ்நிலையில் கிரீட் தீவு அருகே கிழக்கு மத்தியதரைக் கடலில் விழுந்து நொறுங்கியது.


இறந்தவர்களில் 40 எகிப்தியர்களும் 15 பிரெஞ்சு பிரஜைகளும் அடங்குவர். விமானத்தில் இரண்டு ஈராக்கியர்கள், இரண்டு கனடா நாட்டுக்காரர்கள் மற்றும் அல்ஜீரியா, பெல்ஜியம், பிரிட்டன், சாட், போர்ச்சுகல், சவுதி அரேபியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு பயணியும் இருந்தனர்.


விமானம் 2003ல் தான் சேவையில் நுழைந்தது, இது 30 முதல் 40 ஆண்டுகள் செயல்பாட்டு ஆயுளைக் கொண்ட ஒரு விமானத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் புதியது.


இது 37,000 அடி (11,000 மீட்டர்) உயரத்தில் பறந்து கொண்டிருந்தது மற்றும் கிரேக்க தீவான கார்பட்டோஸில் இருந்து சுமார் 130 கடல் மைல் தொலைவில் காணாமல் போனது.
பின்னர் பெரிய படை ஒன்று விமானத்தைத் தேடத் தொடங்கியதில் கிரீஸ் அருகே கடல் ஆழத்தில் விமானத்தின் கருப்புப்பெட்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. 


விமானம் பயங்கரவாதத் தாக்குதலில் வீழ்த்தப்பட்டதாக எகிப்திய அதிகாரிகள் அப்போது கூறியிருந்தனர், ஆனால் எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


விமானியின் அலட்சியத்தால் விமானம் விபத்துக்குள்ளானதாக வந்திருக்கும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.