தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் 40 லட்சம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெங்கு என்பது ஏடிஸ் கொசுக்களால் பரவும் ஒரு நோய். மழைக்காலங்களில் கொசுக்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில் இந்த நோய் தீவிரமடைகிறது. குறிப்பாக தேங்கி இருக்கும் நல்ல நீரில் தான் இந்த கொசுக்கள் உருவாகிறது. டெங்கு எதிரான போராட்டம் உலக நாடுகள் மத்தியில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. டெங்குவை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளது. இருப்பினும் ஆண்டுதோறும் டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகிறது.
அதன்படி தென் அமெரிக்கா நாடான பிரேசிலில் கடந்த 4 மாதங்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. பிரேசிலிய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்த ஆண்டு கர்ப்பிணிப் பெண்களிடையே டெங்கு பாதிப்பு அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 6 வாரங்களில் சுமார் 1,515 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பாதிப்பு 1,157 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
டெங்கு காய்ச்சல் பிரேசில் நாட்டில் அதிகமாக பரவி வரும் நிலையில், கடந்த 4 மாதங்களில் சுமார் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 10 லட்சம் பேருக்கு டெங்கு பரவிய நிலையில் தற்போது 4 மடங்கு அதிகரித்துள்ளது. 4 லட்சம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. எனவே டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் பொதுமக்களுக்கு தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.