சீனாவின் குவாங்டாங் மாகாணத்தின் டபு கவுண்டியில் உள்ள மீஜோ-டாபு விரைவுச் சாலை கனமழை காரணமாக சரிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






 


இந்த விபத்து அதிகாலை 2 மணிக்கு ஏற்பட்டதாகவும், விபத்தின் போது சுமார் 18 வாகனக்கள் அடுத்தடுத்து பள்ளத்தில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் 19 ஆக இருந்த பலி எண்ணிக்கை தற்போது 36 ஆக அதிகரித்துள்ளது. 





நெடுஞ்சாலை இடிந்து விழுந்ததையடுத்து, கீழே உள்ள மலைப் பகுதிகளில் உள்ள பாரிய எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் தீ பற்றி எரிகிறது. அந்த பகுதி முழுவதும் கரும்புகை போல காட்சி அளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்பு பணிகள் துரிதப்படுத்த 500 பேர் கொண்ட மீட்பு குழுவினரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அங்கு மீட்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 


சீனாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமான குவாங்டாங்கில், கடந்த பதினைந்து நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  சில பகுதிகளில் ஆலங்கட்டி மழையும் பெய்துள்ளது. கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 11,000 பேர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.