அமெரிக்கா, பிரிட்டன், நேட்டோ படைகளுக்கு இறுதி ஊர்வலம் நடத்தியுள்ளனர் தலிபான்கள்.


ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. அங்கிருந்து கடைசி அமெரிக்கப் படையினரும் ஆகஸ்ட் 31 கெடுவை மதித்துக் கிளம்பிவிட்டனர். இதனையடுத்து நேற்று தலிபான்கள் காபூலில் உள்ள ஹமீது கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் குவிந்து வெற்றியை நடனமாடி கொண்டாடினர். அப்போது, பேசிய தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகிதீன், இனி ஆப்கானிஸ்தான் சுதந்திர நாடு. இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான், உலக நாடுகளுடன் அமைதியான நல்லுறவை விரும்புகிறது. இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு ஆப்கனில் சுதந்திரமான ஆட்சி நடைபெறும் என்று கூறினார். அவரது பேச்சைத் தொடர்ந்து தலிபான்கள் வானத்தை நோக்கி சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


இறுதி ஊர்வலம்..


இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் கிழக்கே உள்ள கோஸ்ட் நகரில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதன் மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரானஸ், நேட்டோ படைகளின் கொடி போர்த்திய சவப் பெட்டிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அந்நியப் படைகள் வெளியேற்றத்தை அவர்கள் இறுதி ஊர்வலம் நடத்திக் கொண்டாடினர். அப்போது நகரில் பெருமளவில் பொதுமக்கள் திரண்டிருந்தனர். இந்த ஊர்வலத்தை, சிலர் அமைதியாக ஊர்வலத்தைக் கவனித்தனர், சிலர் மொபைலில் ஃபோட்டோ எடுத்துக் கொண்டனர். இன்னும் சிலர் தலிபான் கொடிகளை அசைத்து வரவேற்றனர் என்று ஆப்கன் நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


உள்ளூர் தொலைக்காட்சியான ஜமான் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த தலிபான் அதிகாரிகளுள் ஒருவரன காரி சயீது கோஸ்டி, ஆகஸ்ட் 31 நமது அதிகாரபூர்வ விடுதலை நாள். இந்த நாளில் தான் அமெரிக்கா, நேட்டோ படைகள் நம் மண்ணைவிட்டு முழுமையகா விலகிய நாள் என்று தெரிவித்திருந்தார்.




ஹெலிகாப்டரில் தொங்கவிடப்பட்ட நபர்..


முன்னதாக நேற்று தலிபான்களின் தாலிப் டைம்ஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ ஒன்று உலகையே அதிரச் செய்தது. அமெரிக்காவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் யாரோ ஒருவரை தொங்கவிட்டபடி தலிபான்கள் காந்தஹார் நகரில் ரோந்து வந்தனர். அந்த வீடியோவின் கீழ், நமது விமானப் படை ஹெலிகாப்டரில் காந்தஹார் நகரை ரோந்து செயிறோம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது குறித்து வேறு தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அந்த வீடியோ காட்சி அதிர்ச்சியளிப்பதாகவே இருந்தது.


அதேபோல், அமெரிக்கா, பிரிட்டன், நேட்டோ படைகளுக்கு இறுதி ஊர்வலம் நடத்தியுள்ளனர். 1996-ஆம் ஆண்டில் தலிபான் ஆட்சி இருந்தபோது மக்களுக்கு பல்வேறு கெடுபிடிகள் இருந்தன. பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. பெண்கள் அநாவசியமாக வெளியே வரமுடியாது. ஆண்களும் ஆப்கனின் பாரம்பரிய் உடை மட்டும்தான் அணிய முடியும். இதுமாதிரியான கெடுபிடிகளில் இருந்து ஆப்கன் கடந்த 20 ஆண்டுகளாக விடுபட்டிருந்தது. இந்நிலையில், அங்கு தற்போது மீண்டும் தலிபான்களின் ஆட்சி அமைந்துள்ளது. அதனால், அச்சத்தில் இதுவரை நாட்டிலிருந்து 1,23,000 வெளியேறியுள்ளனர். இவர்களில் வெளிநாட்டவரும் அடங்குவர்.