பெண்கள் 3-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கக் கூடாது என, ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.


தலிபான் அரசு:


ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, அங்கு ஆட்சியை பிடித்த தலிபான்கள் பெண்களுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். சர்வதேச அளவில் அந்த அரசின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வந்தாலும், இஸ்லாமிய மார்கத்தில் தான் ஆட்சி நடைபெற்று வருவதாக தங்களது கட்டுப்பாடுகளை தொடர்ந்து வருகிறது.


”10 வயதுக்கு மேல் படிக்கக்கூடாது”


இந்நிலையில் புதிய கட்டுப்பாடாக 10 வயதுக்கு மேல் உள்ள சிறுமிகளை வீட்டிற்கு அனுப்பும்படி, அந்நாட்டு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியகியுள்ளது. அதன்படி, 3ம் வகுப்பிற்கு மேல் அதாவது 10 வயதிற்கு மேல் உள்ள சிறுமிகள் யாரையும் பள்ளிகளில் அனுமதிக்கக் கூடாது என, காஸ்னி மாகாணத்தில் உள்ள பள்ளி தலைமை ஆசியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று, சில பகுதிகளில் மகளிர் பள்ளிகளில் பயிலும் 10 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகளையும் வீட்டிற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் ஆண் மற்றும் பெண்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, 3 வயதுக்கு மேலானவர்கள் எல்லாம் வீட்டிற்கு செல்லுங்கள் என ஆசிரியர்களே அறிவித்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. வயதுக்கு மீறிய உயரம் உள்ள மாணவிகள் கூட வீட்டிற்கு அனுப்பப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


குவியும் கட்டுப்பாடுகள்:


ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள், மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பெண்களுக்கு விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளில் கல்வித் தடையும் ஒன்றாகும். நாட்டில் பெண்கள் பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், கண்காட்சிகள், சலூன்களுக்குச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  மற்றும் பொது இடங்களில் புர்கா அணிந்து தங்களை முழுமையாக மறைத்துக் கொள்ள வேண்டும். பலர் பெண்கள் அரசு வேலைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.


கல்வி நிலையங்களில் கட்டுப்பாடு:


இதனிடையே, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெண்கள் கல்லூரிகளுக்கு செல்வதை தடை செய்வதாக தாலிபான் அரசு அறிவித்தது. இதுதொடர்பான அறிவிப்பில், பெண்களின் கல்வியை நிறுத்தி வைக்கும் உத்தரவை மறுஅறிவிப்பு வரும் வரை உடனடியாக அமல்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு விளக்கம் அளித்து இருந்த தாலிபான்கள் ” கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தாலும், மாணவிகள் அதனை அலட்சியம் செய்து வருகின்றனர்.  பல்கலைக்கழக வளாகங்களுக்கு ஒரு ஆண் உறவினரும் உடன் வரவேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அவர்கள் பின்பற்றுவதில்லை. இதன் காரணமாக பெண் கல்வியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக” தெரிவித்தனர். பெரும்பாலான கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே பாலின-குறிப்பிட்ட நுழைவுகள், வகுப்பறைகள் மற்றும் வயதான ஆண்கள் அல்லது பெண் பேராசிரியர்கள் மட்டுமே பெண் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில், 3ம் வகுப்பிற்கு மேல் பெண்கள் கல்வி பயில கூடாது என்ற தாலிபான்களின் அறிவிப்பு சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.