ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அவர்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்நாட்டில் ஏராளமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க ஆதரவு அரசு அமைவதற்கு முன்பே தலிபான்கள் ஆட்சி செய்தபோது இருந்த கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. விதிக்கப்பட்டு வரும் பிற்போக்கான விதிகள் காரணமாக அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க தடை:
குறிப்பாக, பெண்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் மோசமான கட்டுப்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளுர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களில் பெண்களை பணியில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என தலிபான் அரசு கட்டுப்பாடு விதித்தது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. இப்படி, பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், பெண்களின் உரிமைகள் தங்களுக்கு முக்கியமல்ல என தலிபான் விளக்கம் அளித்தது.
கருத்தடை மருந்துகளை பயன்படுத்த கட்டுப்பாடு:
இரண்டு முக்கிய நகரங்களில் கருத்தடை மருந்துகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அங்கு, கருத்தடை மருந்துகள் விற்கப்படுவதை தலிபான்கள் நிறுத்தினர்.
கட்டாயப்படுத்தப்படும் பெண்கள்:
இந்நிலையில், பெண்களை ஒடுக்கும் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, கணவன்மார்கள் துன்புறுத்தியதன் காரணமாக அவர்களிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் பெண்கள் மீண்டும் அவர்களுடன் சேர்ந்து வாழ கட்டாயபடுத்தப்பட்டுள்ளனர்.
மர்வா (பெயர் மாற்றம் செய்யப்பட்டது) என்ற பெண், பல ஆண்டுகளால் அவரின் கணவரால் துன்புறுத்தப்பட்டு வந்துள்ளார். மர்வாவின் பற்கள் அனைத்தையும் அவரின் கணவர் அடித்து நொறுக்கி உள்ளார்.
இதனால், அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்த வந்துள்ளார். ஆனால், தலிபான் அரசு அவரின் விவாகரத்தை ரத்து செய்துள்ளதால் மீண்டும் தன்னுடைய 8 குழந்தைகளுடன் மறைந்து வாழ தொடங்கியுள்ளார் மர்வா.
தன்னுடைய மோசமான அனுபவங்களை விவரித்துள்ள மர்வா, "தலிபான் அரசு பதவியேற்ற நாளில் நானும் என் மகள்களும் மிகவும் அழுதோம். நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன், அய்யோ, பிசாசு திரும்பி வந்துவிட்டது என. பல மாதங்களாக, நான் தாக்கப்பட்டு வந்தேன். வீட்டில் பூட்டி வைக்கப்பட்டு, கைகள் உடைக்கப்பட்டு விரல்கள் உடைக்கப்பட்டன.
நான் மயக்கத்தில் இருந்த நாட்கள் ஏராளம். என் மகள்கள்தான் எனக்கு உணவளிப்பார்கள். என் பற்கள் அனைத்தும் உடைந்து போகும் அளவுக்கு அவர் என்னை அடித்தார்" என்றார்.
இதுபோன்று, பல பெண்களை கட்டாயப்படுத்தி மோசமான திருமண உறவுக்குள் தள்ளுகின்றனர் தலிபான்கள் என பல்வேறு வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.