ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்த நாட்டு படைகளுக்கும் இடையே நீண்ட காலமாக சண்டை நடைபெற்று வந்தது. அமெரிக்க படைகள் அந்த நாட்டில் இருந்து வெளியேறியதால், தலிபான்களின் ஆதிக்கம் அந்த நாட்டில் தீவிரமடைந்த நிலையில், தலிபான்கள் ஆப்கானிஸ்தான் முழுவதையும் நேற்று கைப்பற்றினர். அந்நாட்டின் அதிபர் அஷ்ரப்கனி அண்டை நாடான தஜிஹிஸ்தானில் தஞ்சம் புகுந்துள்ளார்.
தலிபான்கள் முழு நாட்டையும் கைப்பற்றிவிட்டதால் அந்த நாட்டு மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். அந்த நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டினர் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பி வருகின்றனர். அந்த நாட்டு மக்கள் பலரும் வெளிநாடுகளுக்கு தப்பிச்சென்று வருகின்றனர்.
தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் ஆப்கான் மக்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில், விமான நிலையத்தில் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 5 பேர் வரை உயிரிழந்தனர். இந்த நிலையில், காபூல் விமான நிலையம் அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில், எஞ்சிய அமெரிக்க வீரர்களும் தாயகம் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, இன்று அங்கிருந்து அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
அப்போது. விமான நிலையத்தின் ஓடுதளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் ஏதோ பேருந்தின் பின்னால் ஓடுவது போல ஓடுகின்றனர். மேலும், சிலர் பேருந்தின் படியில் தொங்கிக்கொண்டு பயணிப்பதை போல விமானத்தின் டயர்களில் தங்களை கட்டிக்கொண்டு எப்படியாவது நாட்டை விட்டு தப்பிவிட்டால் போதும் என்று விமானத்தின் டயர்களில் தங்களை கட்டிக்கொண்டனர்.
அப்போது, விமானம் மேலே எழுந்து பறந்தபோது சில நூறு அடிகள் தூரம் உயரத்திற்கு பறந்தபோது விமானத்தின் டயரை பிடித்துச்சென்ற ஒருவர், தனது பிடி நழுவி கீழே விழுந்தார். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
ஆப்கானிஸ்தானின் மக்களின் நிலை கண்டு, உலகின் பல தரப்பினரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். அங்குள்ள மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆப்கானிஸ்தானின் பரிதாப நிலையை கண்டு, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு ஆப்கன் மக்கள் சிலர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எங்களை ஏமாற்றிவிட்டதாக வேதனையுடன் போராடி வருகின்றனர். ஆப்கானில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலை என்ன என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் பலரும் குரல்கொடுத்து வருகின்றனர். ஐ.நா. சபை இன்று ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளனர்.