இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருணாநிதி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "இராமநாதபுரம் மாவட்டம் இயற்கையாகவே வானம் பார்த்த பூமி, இப்பகுதி மக்கள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் கிடைக்கும் ஆதாரத்தை பயன்படுத்தி கடினமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கே.வேப்பங்குளம் கிராமத்தில் 4.95 ஹெக்டர் பரப்பளவில் மலட்டாறு பகுதியில் புதிய மணல் குவாரி அமைத்து செயல்பட்டு வருகிறது.
இந்த மணல் குவாரிக்கான அனுமதியை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் 02.05.2022 அன்று வழங்கியுள்ளார். மேலும் உரிய களவிசாரணை செய்யாமலும்; பொதுமக்களிடம் கருத்து கேட்காமலும்; அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தவறான அறிக்கையை சமர்ப்பித்து இந்த மணல் குவாரிக்கு அனுமதியை வழங்கியுள்ளனர்.
மணல் குவாரி அமைந்துள்ள கே.வேப்பங்குளம் அருகில் ஐந்திற்கும் மேற்பட்ட போர்வெல் மற்றும் கிணறுகள் அமைத்து அதில் கிடைக்கும் தண்ணீரை தான் சுற்றியுள்ள கிராமங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் வினியோகம் தடைபடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ள மணல் குவாரிக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மணல் குவாரி அமைப்பதற்கு உத்தரவு பிறப்பித்தது யார்? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, மணல் குவாரிக்கு அனுமதி வழங்கி இருக்கக் கூடாது; மணல் குவாரி அமைப்பதற்கு நீதிமன்றங்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது ஆனால் அதனை மீறி நீங்கள் புதுவிதிகளை உருவாக்குகிறீர்கள் என கருத்து தெரிவித்தனர். இதனை அடுத்து அரசு தரப்பில், பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டு மணல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டது என தெரிவித்தனர்.
இதனை குறித்துக் கொண்ட நீதிபதிகள், அரசு தரப்பில் விதிக்கப்பட்ட விதிகள் குறித்து தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நாளைய தினத்திற்கு ஒத்தி வைத்தனர்.
மற்றொரு வழக்கு
தமிழகத்தில் மோசமான நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடம் அமைக்க கமிட்டியமைக்க உத்தரவிட கோரிய வழக்கை முடித்து வைத்து உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த சமூகநல ஆர்வலர் செந்தில் முருகன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழகத்தில் அரசு தொடக்க பள்ளி, உயர்நிலை பள்ளி,மேல்நிலை பள்ளி,அங்கன் வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பெரும்பாலான பள்ளிகளில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டிய கட்டிடாங்கள் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் சமீபகாலமாக பல பள்ளிகூடங்களின் மேற்கூறை,மற்றும் கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ளது.மேலும் மதுரை,கோவை,திருநெல்வேலி, சென்னை, உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கட்டிடங்களின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.ஆனால் உயரிழப்புகள் இல்லை, குறிப்பாக மதுரை கொடிமங்கலத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடம் மேற்கூரை
இடிந்து விழுந்தது.அந்த நேரத்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது.எனவே தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், அங்கன்வாடி கட்டிடங்களின் உறுதி தன்மையை ஆய்வு செய்து அதில் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடம் கட்ட கமிட்டி அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் சத்யநாராயணா பிரசாத் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. பள்ளி கல்வித்துறை சார்பில் பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவுசெய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைதனர்