International Space Station: விண்வெளியில் , பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தை, சென்னைவாசிகள் நேரில் கண்டு களித்ததாக தெரிவித்துள்ளனர்.
சர்வதேச விண்வெளி நிலையம்:
சர்வதேச விண்வெளி நிலையமானது, 1998 ஆம் ஆண்டில், பூமியிலிருந்து சுமார் 360 கி.மீ உயரத்தில் நிறுவப்பட்டது. இது 92 நிமிடத்துக்குள் பூமியை முழுமையாக சுற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆகையால் ஒரு நாளில் 16 முறை பூமியை சுற்றி வரும் என்பது குறிப்பிடத்தக்கது . ஒரு நாளில் 16 முறை பூமியை சுற்றி வருவதால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் 16 முறை சூரிய உதயத்தையும், சூரிய மறைவையும் காண முடியும்.
இந்த விண்வெளி நிலையமானது, விண்வெளி ஆய்வுக்காக பயன்படுகிறது. அங்கு விண்வெளி வீரர்கள் சென்று விண்வெளி ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இத்திட்டமானது அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஐரோப்பா, மற்றும் கனடா ஆகிய ஐந்து விண்வெளி நிறுவனங்களை உள்ளடக்கியதாகும்.
சர்வதேச விண்வெளி நிலையமானது, தற்போது எங்கு உள்ளது என்பதை அறிய ’ஸ்பாட் தி ஸ்டேஷன்’ என்ற வலைதளத்தின் மூலமாக காணலாம் அல்லது மொபைல் செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
எப்போது தெரியும்;
எப்பொழுது 40 டிகிரிக்கும் அதிகமான உயரம் என்று ’ஸ்பாட் தி ஸ்டேஷன்’ வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தால் , நாம் வெறும் கண்ணால் பார்ப்பதற்கான வாய்ப்பு உண்டு என நாசா தெரிவித்துள்ளது. சந்திரன் எவ்வாறு சூரிய ஒளி பெற்று பிரதிபலிக்கிறதோ அதைப்போலவே, சர்வதேச விண்வெளி நிலையத்தை நாம் வெறும் கண்களால்கூடப் பார்க்க முடியும். ஏனெனில் அது சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கிறது. ஆனால் சந்திரனைப் போல, விண்வெளி நிலையம் பகலில் பார்க்கும் அளவுக்கு பிரகாசமாக இல்லை. உங்கள் இருப்பிடத்தில் விடியற்காலையில் அல்லது அந்தி சாயும் போது மட்டுமே பார்க்க முடியும். நீங்கள் இருக்கும் இடத்தில் இருள் சூழ்ந்திருக்க வேண்டும்.
சென்னைக்கு மேலே விண்வெளி நிலையம்:
இந்நிலையில் வெள்ளிக்கிழமை ( மே 10 ) அன்று இரவு 7.09 மணி அளவில் அதிகபட்சம் 63 டிகிரி உயரத்தில் தெரியும் என ( ஸ்பாட் தி ஸ்டேஷன்’-ல் ) தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னைவாசிகள், பலர் சர்வதேச விண்வெளி மையத்தை பார்த்ததாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
ஆனால், இது அதிகாரப்பூர்வமாக நமது இஸ்ரோ நிறுவனம் எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. ஆகையால், சமூக வலைதளங்களில் பயணர்கள் பகிர்ந்த அனைத்து புகைப்படங்களும் உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால், அதிகாரப்பூர்வமாக நாசா வலைதளத்தில் 7.09 மணி அளவில் சென்னையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது, ஆனால் புகைப்படங்களை பகிரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.