ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் என்ற பெயரில் அவர்களது உரிமைகளும், சுதந்திரமும் நாள்தோறும் பறிக்கப்பட்டும், நசுக்கப்பட்டும் வருகிறது.


இந்த நிலையில், அமெரிக்கா ஆதரவுடன் இருந்த அப்போதைய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில் பெண் எம்.பி.யாக இருந்தவர் முர்சல் நபிஜடா. முன்னாள் எம்.பி.யான இவர் காபூல் நகரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் முன்னாள் எம்.பி.யான முர்சல் நபிஜடாவை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர்.




அவருடன் சேர்த்து அவரது பாதுகாவலர் ஒருவரையும் அவர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். வீடு புகுந்து எம்.பி.யையும், அவரது பாதுகாவலரையும் சுட்டுக்கொன்ற அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது. இந்த கொடூரச் சம்பவத்தில் முர்சல் நபிஜடாவின் சகோதரரும் பலத்த காயமடைந்துள்ளார்.  


இந்த சம்பவம் தொடர்பாக அந்த நாட்டில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் நபிஜடாவின் ஒரு பாதுகாவலர் உயிரிழந்த நிலையில், நபிஜடாவின் சகோதரருடன் மற்றொரு பாதுகாவலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. நபிஜடாவிற்கு பாதுகாப்பிற்காக இருந்த மூன்றாவது பாதுகாவலர் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்துடன் தப்பியோடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




தற்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நபிஜடா தலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகும் காபூலில் தங்கியிருந்த சில பெண் எம்.பி.க்களில் ஒருவர் ஆவார். 32 வயதே ஆன நபிஜடா ஆப்கானிஸ்தானின் கிழக்கு மாகாணமான நங்கர்ஹரைச் சேர்ந்தவர். கடந்த 2019ம் ஆண்டு காபூலில் இருந்து அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர். ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.


அந்த நாட்டின் தலைவர்களில் ஒருவரான மரியம் சோலைமான்கில் தனது ட்விட்டர் பக்கத்தில் நபிஜடா ஆப்கானிஸ்தானின் அச்சமற்ற சாம்பியன் என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.




ஆப்கானிஸ்தான் நாட்டில் மீண்டும் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கட்டுப்பாடுகள் என்ற பெயரில் அவர்களின் கல்வி உரிமைகள், பொது இடங்களில் நடமாடுதல், பொதுவெளிக்கு செல்வது ஆகிய உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. தற்போது முன்னாள் பெண் எம்.பி.யான நபிஜடா சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.