கடந்த 2021ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை கவிழ்த்து தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அவர்கள் ஆட்சியை கைப்பற்றியது முதல் அந்த நாட்டில் ஏராளமான கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.  


அமெரிக்க ஆதரவு அரசு அமைவதற்கு முன்பு தலிபான்கள் ஆட்சி செய்தபோது இருந்த கடும் கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு வருவது உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியது. விதிக்கப்பட்டு வரும் பிற்போக்கான விதிகள் காரணமாக அந்த நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். 


குறிப்பாக, பெண்களுக்கு எதிராக கொண்டு வரப்படும் மோசமான கட்டுப்பாடுகள் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆப்கானிஸ்தானில் உள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.


இதற்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்திருந்தது. தலிபான் அரசின் நடவடிக்கை உலக அளவில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


இதை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து உள்ளுர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களில் பெண்களை பணியில் அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என தலிபான் அரசு அறிவித்தது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது.


இப்படி, பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வரும் நிலையில், பெண்களின் உரிமைகள் தங்களுக்கு முக்கியமல்ல என தலிபான் விளக்கம் அளித்துள்ளது.


இதுகுறித்து தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் வெளியிட்ட அறிக்கையில், "பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவது எங்களுக்கு முக்கியம் அல்ல.


இஸ்லாமிய சட்டத்தை மீறும் எந்தவொரு செயலையும் அனுமதிக்க மாட்டோம். மேலும் பெண்களின் உரிமைகள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்பான பிரச்சினைகள் நாட்டில் தலிபான் அமைப்பால் நிறுவப்பட்ட விதியின் படி கையாளப்படும். 


இஸ்லாமிய அமீரகம் அனைத்து விஷயங்களையும் இஸ்லாமிய ஷரியாவின்படி ஒழுங்குபடுத்த முயற்சிக்கிறது. மேலும். ஆளும் அரசாங்கம் நாட்டில் ஷரியாவுக்கு எதிராக செயல்பட அனுமதிக்காது" என குறிப்பிட்டுள்ளார்.


 






தலிபான் அரசின் இந்த முடிவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் முழுவதும் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஐக்கிய நாடுகள் (UN) உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், உலக நாடுகள், இந்த நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளது.