Afghanistan Earthquake : ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகே இருவேறு இடங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அடுத்தடுத்து நிலநடுக்கம்


ஆப்கானிஸ்தான் பைசாபாத் பகுதியில் இன்று நள்ளிரவு 1.17 மணிக்கு 4.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 1.17 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் பைசாபாத் கிழக்கு பகுதியில் இருந்து 173 கி.மீ தொலையில் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி சாலையில் முகாமிட்டுள்ளனர். 






இதனை அடுத்து அதிகாலை 4.16 மணிக்கு மீண்டும் பைசாபாத் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பைசாபாத் பகுதியில் இருந்து 188 கி.மீ தொலைவில் ஏற்பட்டது. அதிகாலை 4.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில்  ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பைசாபாத் பகுதியில் சுற்றி இருக்கும் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.


துருக்கியில் நிலநடுக்கம்


இதற்கிடையில், துருக்கியிலும் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கி நாட்டின் அப்சின் நகரில் இருந்து 23 கி.மீ தென்மேற்கே இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0ஆக பதிவாகி உள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அமெரிக்க புவியியல் ஆய்வும் மையம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் பற்றி எந்தவித தகவலும் வெளிவரவில்லை.


முன்னதாக, கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி  துருக்கி- சிரியா எல்லைப்பகுதியான காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகி நகரத்திற்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவில் 4.1 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை  சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.  ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் பல கட்டிடங்கள்  சரிந்து விழுந்து தரைமட்டமாகின.  இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி, சிரியாவில் சுமார் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


துருக்கியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தை ஒப்பிடும் போது மற்றவை எல்லாம் லேசானது. ஆனாலும் துருக்கி – சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலகை உளுக்கிய நிலையில், அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்படுவதால் மக்கள் பீதியில் உள்ளனர்.




மேலும் படிக்க


Crime: கார் பேனட்டில் தொங்கிய போக்குவரத்து காவலர்..! 19 கி.மீ. தொலைவிற்கு இழுத்துச்சென்ற இளைஞர்..! நடந்தது என்ன?