அமெரிக்காவில் கொரோனா நிவாரண கடனாக வழங்கப்பட்ட  1.8 மில்லியன் டாலர் பணத்தினை மோசடி செய்த வழக்கில்  இந்திய வம்சாவளியைச்சேர்ந்த தொழில்நுட்ப நிர்வாகியான முகுந்த் மோகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இந்தியர்களின் திறமையை முழுமையாக உணர்ந்த மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் தனது நிறுவனத்தில் பல உயர் பதவிகளுக்கு இந்தியர்களை நியமனம் செய்து வந்தது. இதன் ஒரு பகுதியாக இந்திய நிறுவனத்தின் தலைவர் முகந்த் மோகன் தற்போது  அமெரிக்க கிளையில் தலைவராக பணிமாற்றம் செய்யப்பட்டதையடுத்து அவர் அங்கு சென்று தன்னுடைய பணிகளைக் கவனித்து வந்தார். இதோடு இந்திய வம்சாளியைச்சேர்ந்த தொழில்நுட்ப நிர்வாகியான 48 வயதான  முகுந்த் மோகன் மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களில் பணிபுரிந்தார்.





இந்நிலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றின் தாக்கத்தினால் அனைத்து நிறுவனங்களிலும் பொருளாதார நெருக்கடியை சந்தித்தனர். அக்காலக்கட்டத்தில் தான் தனது 6 நிறுவனங்களுக்கு கொரோனா நிவாரண நிதி வேண்டும் என்று கடன் தொகையினைப்பெற்றிருந்தார்.  இந்த கடன்கள் தொற்றுநோய்களின் போது ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ள நிறுவனங்களுக்கு உதவ வேண்டும் என்று ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மோகனின் நிறுவனங்கள் ஒரு தொழிலாளிக்கு கூட உதவி செய்யவில்லை எனவும், இந்த காலக்கட்டத்தில்  புதியதாக ஆட்களையும் சேர்க்கவில்லை.  ஆனால்  231,000 டாலர் பணத்தை தனது ராபின்ஹுட் தரகு கணக்குக்கு மாற்றியுள்ளதாகத் தெரிகிறது.  இதனால் அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்யபட்டிருந்தார்.


மேலும் அவர் போலி ஆவணங்களைக்காட்டி $ 5.5 மில்லியன் மதிப்புள்ள கடன்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுக்குறித்து சியாட்டிலில் உள்ள அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் , முகுந்த் நடத்தும் நிறுவனங்களுக்காக 5.5 மில்லியன் டாலர் கேட்டு போலி ஆவணங்களை தந்துள்ளார் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் அவர் $ 1.8 மில்லியன் தொகையைப் பெற்றார். ஆனால் எந்த தொகையும் இதுவரை அவருடைய ஊழியர்களுக்காக செலவிடவில்லை என்று கூறப்படுகிறது. இதோடு இப்பிரச்சனைக்குறித்து முகந்த மோகன் வழக்கறிஞர் தெரிவிக்கையில், இதுவரை குற்றம் செய்துள்ளார் என்பதற்கான எந்த ஆவணமும் இல்லை என்றும், அவர் பணத்தில் $ 16,500 மட்டுமே செலவழித்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் அவர் சமீப காலங்களாக மனரீதியாக பாதிப்பினை சந்தித்து வந்தார் என்றும் வழக்கறிஞர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.





இதனையடுத்து இந்த வழக்கில், மத்திய அதிகாரிகள் போலியாக ஆவணங்களை தாக்கல் செய்து பெறப்பட்ட பணத்தினைக் கைப்பற்றினர். மேலும் இதுவரை செலவழித்தத் தொகையும் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும், அபராதத்தொகை கட்ட வேண்டும் என்று தெரிவித்ததோடு புகழ்பெற்ற தொழில்நுட்ப நிர்வாகியான முகுந்த மோகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டப்பட்டுள்ளது.