ஆப்கானிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமாகவும், தலிபான் அமைப்பின் ஆன்மீக தலைநகரமாகவும் விளங்கும் காந்தகர் நகரில் உள்ள ஷியா சிறுமான்மையினருக்கு சொந்தமான  மசூதியில் தொழுகையின் போது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு  இஸ்லாமிக் அரசு கொரசான் (Islamic State Khorasan) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 


இந்த படுகொலை சம்பவத்தில், 37 பேர்  பலியாகியுள்ளதாகவும், 70 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் மருத்துவமனைகள் தெரிவித்துள்ளது.



சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் இது குறித்து கூறுகையில், " வெள்ளிக்கிழமை 500 பேர் வரை இந்த மசூதியில் தொழுகை செய்வது வழக்கம். நான்கு பேர் கூட்டாக இந்த கோழைத்தனமான தாக்குதலைத் நடத்தினர். நால்வரில் இருவர் தமது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை மசூதிக்கு வெளியில் வெடிக்க செய்தனர். உடனடியாக, மசூதிக்குள் நுழைந்த மற்ற இருவர் தங்கள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர்" என்று தெரிவித்தனர். 


தாக்குதல் சம்பவத்தை உறுதி செய்த தலிபான் செய்தித் தொடா்பாளா் பிலால் கரிமி ,"ஆப்கானில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலை நாட்ட தலிபான் உறுதி பூண்டுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசராணை முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். 


கடந்த வாரம், வடக்கு ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவினருக்கான மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில் 46 போ் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் ஹஸாரா எனப்படும் சிறுபான்மை இனத்தைச் சோ்ந்தவா்கள். இந்த தாக்குதல் சம்பவத்துக்கும் இதே (இஸ்லாமிக் அரசு கொரசான்) அமைப்பு பொறுப்பெற்றுக் கொண்டது. 



தலிபான், ஐஎஸ்ஐகே என்ற இரண்டு அமைப்புமே இஸ்லாமியப் பிரிவுகளில் ஒன்றான சன்னி இசுலாத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், ஐஎஸ்ஐகே தீவிர இஸ்லாத்தை முன்னிலைப்படுத்துகிறது. மேலும், மற்றொரு உட்பிரிவான ஷியா இசுலாத்தின் மீது (heretics) முழுமையான பரிபூரண முரண்பாடுகளைக் கொண்டுள்ளது.           


ஈராக்கிலும் சிரியாவிலும் ஐ.எஸ் (ஐ.எஸ்.ஐ.எஸ்) என்ற அமைப்பின் துணை கிளையாக, இந்த கொரசான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வந்தது. நடு ஆசியாவையும் ஆப்கானிஸ்தானையும் உள்ளடக்கிய 'கொரசான்' என்ற அகண்ட நிலப்பரப்பை ஆக்கிரமிப்பதற்காக 2015-ஆம் ஆண்டில் உருவானது. 


ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பைப் போலவே, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. லஷ்கர்-ஏ-தொய்பா (எல்இடி), ஹக்கானி அமைப்பு, ஜமாத்-உத்-தவா, தலிபான், தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் போன்ற பல்வேறு அமைப்புகளுடன் இந்த பயங்கரவாதக் குழு மாறுபடுகிறது. 


தலிபான் அமைப்புடன் எப்படி மாறுபடுகிறது?  தலிபான் அமைப்பு பொதுவாக தேசியம், தேசியவாதம், தேசம்-நாடு போன்ற சொல்லாடல்களை முன்னெடுக்கிறது. தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் என்ற நிலப்பரப்பை கட்டிக்காக்க விரும்புகிறது. வரலாற்று ரீதியாக இதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன. உதாரணமாக, அல்-கொய்தா மற்றும் இதர இஸ்லாம் பயங்கரவாத அமைப்புகளில் மிகவும் குறைவான தலிபான் அமைப்பினர் கலந்து கொண்டுள்ளனர்.  இவர்களுக்கு காஷ்மீர் பற்றியும், சீனாவின் ஷின்ஜியாங் பகுதியில் வாழும் சிறுபான்மை வீகர் முஸ்லிம்கள் பற்றியோ பெரிய புரிதலும்  இல்லை,ஆர்வமும் இல்லை.  


ஐஎஸ்எஸ் பொதுவாக மத்திய ஆசியா நிலப்பரப்புகளில் அதிகமாக குறிவைக்கிறது. இதன் காரணமாக, தெற்காசியா பற்றிய புரிதல் அதனிடம் அதிகம் இல்லை.


ஆனால், இஸ்லாமிக் அரசு கொரசான் தெற்காசியாவை அதிகம் குறிவைக்கிறது. இந்தியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது என்ற செய்தியை அவ்வப்போது  நாம் ஊடகங்களில் கேள்விப்பட்டிருப்போம். இவர்களில், பெரும்பாலானோர் அனைவருமே இஸ்லாமிக் அரசு கொரசான் அமைப்பைச் சேர்ந்தவர்களாகத்தான் உள்ளனர். 


கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானின் நங்கார்ஹர் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத்தில் உள்ள மிகப்பெரிய சிறைச்சாலையில் தாக்குதலுக்கும் இந்த அமைப்பு பொறுப்பேற்றது. இதில், 29 சிறைக்கைதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 25 பேரில்,  கேரளாவைச் சேர்ந்த  அப்துல் ரஷீத் அப்துல்லா உட்பட்ட மூன்று இந்தியர்களும், தாஜிக்ஸ் பிரிவினர்களும், பாகிஸ்தானியர்களும் அடங்குவர். இந்த தாக்குதல் சம்பவம் நடைபெறுவதற்கு முன்பாக, உருது மொழியில் வீடியோ வெளியிடப்பட்டது. தாக்குதல் சம்பவம் நடைபெற்ற பிறகு, அப்துல் ரஷீத் அப்துல்லா பேசிய வீடியோவும் உறுதி மொழியில் இருந்தது. அதாவது, இந்த சம்பவத்தின் தெற்காசியாவின் அடையாளங்களை இந்த அமைப்பு பெற்றது