ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த நாட்டையும் கைப்பற்றினார். மேலும், தலிபான்கள் நாட்டில் நடைபெற்று வந்த போர் நிறைவு பெற்றதாகவும், ஆட்சி பொறுப்பை தலிபான்கள் ஏற்பதாகவும் அறிவித்தனர். தலிபான்களின் இந்த நடவடிக்கையால் ஒட்டுமொத்த உலகமே அதிர்ந்தது.


குறிப்பாக, அந்த நாட்டு மக்கள் பலரும் தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அண்டை நாடுகளுக்கு தஞ்சமடையத் தொடங்கினார். குறிப்பாக, கடந்த திங்கள்கிழமை ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் மக்கள் திரண்ட புகைப்படங்கள் பார்ப்போரை கண்கலங்க வைத்தது.




குறிப்பாக, விமான ஓடுதளத்தில் இருந்து அமெரிக்கா நோக்கி புறப்பட்டு சென்ற விமானத்தின் டயரை பிடித்துக்கொண்டு பலரும் மிகவும் ஆபத்தான சூழலில் உயிரை பயணம் வைத்து தப்பிச்சென்ற சம்பவம் காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைத்தது. அப்படி தப்பிச்சென்றபோது விமானம் சில நூறு அடிகள் சென்றபோது விமானத்தின் டயரை பிடித்துச் சென்ற நபர் ஒருவர் பிடி நழுவி வானில் இருந்து கீழே விழுந்த வீடியோ உலகம் முழுவதும் வைரலாகியது. மேலும், ஆப்கனின் பரிதாப நிலையை கண்டு மக்கள் கண்ணீர் வடித்தனர்.


தற்போது, விமானத்தில் இருந்து கீழே விழுந்த நபர் யார் என்ற தகவல் கிடைத்துள்ளது. ஆப்கான் செய்தி நிறுவனமான ஹரியானா வெளியிட்ட செய்தியில் உயிரிழந்த நபரின் பெயர் ஜாகி அன்வாரி என்றும், அவர்தான் அமெரிக்காவின் ராணுவ விமானமான போயிங் சி-17 என்ற விமானத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தவர் என்றும் தெரிவித்துள்ளது.






ஜாகி அன்வாரி ஆப்கான் அணியின் தேசிய கால்பந்து விளையாட்டு வீரர் ஆவார். ஜாகி அன்வாரிக்கு வெறும் 19 வயதே ஆகியுள்ளது. அவர் காபூலில் பிறந்து வளர்ந்தவர். அவர் தனது 16-வது வயது முதல்தான் கால்பந்து ஆடத் தொடங்கியுள்ளார். ஒரு இளம் கால்பந்து வீரர் இதுபோன்று கொடூரமாக தருணத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு பலரும் சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர். 


மேலும், காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற அமெரிக்க ராணுவ விமானத்தின் டயர்களை பலரும் பிடித்து பயணித்தனர். அவர்களின் நிலை என்ன? அவர்களில் எத்தனை பேர் உயிருடன் இருக்கின்றனர்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், விமானத்தின் லேண்டிங் கியர் எனப்படும் அந்த சக்கரத்தை உள்ளே இழுத்தபோதுதான் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் சிலர் கூறியுள்ளனர். மேலும், இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்த அன்று காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : Afghan Women Rights: பெண்கள் கல்வி குறித்து இஸ்லாமிய மதகுருமார்களே முடிவு செய்வார்கள் - தலிபான் தலைவர் பேட்டி