ஆப்கானிஸ்தானின் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பணியாற்றிய சையது அகமது தற்போது ஜெர்மனி நாட்டில் பீட்சா டெலிவரி பாயாக வேலை செய்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது. இவரின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


 ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு மக்கள் அங்கு இருப்பதற்கு விருப்பம் இல்லாமல் அகதிகளாக அண்டை நாட்டுக்கு படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் தாலிபான்களின் தாக்குதலுக்கு முன்னதாகவே ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியுடன் அமைச்சர்கள் பலர் கருத்து வேறுபாடுகளுடன் பணியாற்றி வந்துள்ளனர். இந்நிலையில் தான்  சரியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாக அதிபருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக ஆப்கானிஸ்தானின் தகவல் மற்றம் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்த சையது அகமது தனது பதவியை ராஜினாமா செய்ததோடு அந்நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனியில் குடியேறினார்.



இவர் 13 நாடுகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புத் துறையில் பணியாற்றியதோடு, 2005 முதல் 2013 வரை தகவல் மற்றும் தொழில்நுட்ப ஆலோசகர் என பல்வேறு அரசு பதவிகளை வகித்து வந்திருந்தார் இந்த சையது அகமது. மேலும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில்  தகவல் தொடர்பு மற்றும் மின்னணு பொறியியலில் இரண்டு முதுகலை பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார். இத்தகைய பல்வேறு திறமைகளை தன்னுடன் கொண்டிருந்தபோதும் ஆப்கானிஸ்தான் அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இவர் தற்போது ஜெர்மனியில் உணவுகளை வீடு வீடாக டெலிவரி செய்யும் பணியில் இருந்து வருகிறார்.


ஜெர்மனியில் லீப்ஜிக் நகரத்தில் பணியாற்றி வரும் இவர், இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்றும் எங்கள் குடும்பத்துடன் எளிமையான வாழ்க்கையை நடத்தி வருகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் தெரிவித்த இவர், பல நிறுவனங்களில் வேலை கேட்டு அலைந்தும் எனக்கு கிடைக்கவில்லை. அதன் காரணமாக தான் இந்த வேலையினை நான் தேர்ந்தெடுத்தேன் என்றார்  ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சர் சையது அகமது.  மேலும் தற்போது வேலைபார்க்கும் பணத்தில் கொஞ்சம் மிஞ்சம் செய்து ஜெர்மனியில் படிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். இதோடு ஆப்கானிஸ்தானில் அஷ்ரப் கனி அரசு இவ்வளவு சீக்கிரம் கவிழும் என்று நான் நினைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.





தற்போது சையது அகமது டோர் டெலிவரி பாய் உடையில் ஒரு சைக்கிளில் வீடு வீடாக சென்று பீட்சா டெலிவரி செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது. இந்த புகைப்படத்தினை சமூகவலைத்தளங்ளில் பார்த்த நெட்டிசன்கள், பண நெருக்கடியான காலக்கட்டத்தில் ஆப்கானிஸ்தானில் தகவல் தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவுவதற்காக சையது அகமது ஜெர்மன் சென்றதாகக்கூறப்படுகிறது. மேலும் தலிபான்கள் ஆட்சியைப் பிடித்தவுடன் இனி இந்நாட்டில் இருக்க முடியாது என்று அதிபர் அஷ்ரப் கனி தற்போது நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். இந்நிலையில் இவருக்கு கீழே பணியாற்றிய ஒரு அமைச்சர் வேறு நாட்டிற்கு சென்றாலும் தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவதைப் பார்த்த இணையவாசிகள் பாராட்டு்களைத் தெரிவித்து வருகின்றனர்.  மேலும் சொந்த நாட்டைவிட்டு தற்போது ஆப்கானிஸ்தான் மக்கள் வெளியேறிவரும் நிலையில், சையது அகமது போன்று தன்னம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


தலிபான்கள் தற்போது ஆட்சியைப்பிடித்தவுடன் வருகின்ற ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வேறு நாட்டினர் ஆப்கானிஸ்தானினை விட்டு வெளியேற வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேதியின் மேலும் நீடிக்க வேண்டும் என ஜி7 நாட்டு உலகத்தலைவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.