பஹ்ரைன் நாட்டில் சமூக செயற்பாட்டாளர்கள் 9 பேரின் ஐஃபோன் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெகசஸ் ஒற்றறியும் செயலி ஏற்படுத்திய சர்ச்சையால் இந்தியாவில் அண்மையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரே முடங்கியது.


இந்நிலையில் தற்போது, பஹ்ரைன் நாட்டில் சமூக செயற்பாட்டாளர்கள் 9 பேரின் ஐஃபோன் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


யார் அந்த பஹ்ரைன் செயற்பாட்டாளர்கள்?


பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் 9 பேரின் ஐஃபோன்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் அவர்களில் இருவர் இங்கிலாந்து நாட்டால் அடைக்கலம் கொடுக்கப்பட்டு அங்கு வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரின் ஃபோன்களும் கடந்த 2020ல் உளவு பார்க்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் ஃபோன்கள் பஹ்ரைன் அரசால் 2017ல் உளவு பார்க்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் வலைபதிவர்கள், சிலர் வாத் (Waad) உறுப்பினர்கள், சிலர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிலர் அல் வெஃபாக் அமைப்பினர்.


இது தொடர்பாக தி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்று பஹ்ரைன் அரசு தெரிவித்துள்ளது.


பஹ்ரைன் அரசின் செய்தித்தொடர்பாளர் தி கார்டியன் பத்திகைக்கு அளித்துள்ள பேட்டியில், எங்கள் நாட்டின் மீது அடிப்படை ஆதாரமற்றது. யாரோ சிலரின் தவறான வழிகாட்டுதலால் எங்கள் மீது இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் அரசு ஒவ்வொரு தனிநபரின் உரிமையையும் பேணிப் பாதுகாக்க முற்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.




பெகசஸ் பின்னணி:


இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ 2019-ம் ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்திய 'பெகசஸ்' ஸ்பைவேர் செயலி உளவு பணிகளுக்காகவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதாகும். இந்த ஒற்றறியும் பெகசஸ் செயலியின் மூலம் உளவு அமைப்புகளால் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் என அனைத்து விதமான இயங்கு தளங்களிலும் ஊடுருவி பயனர்களின் தரவுகளைத் திருடி அவர்களின் தொலைபேசிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணிக்க முடியும்.


பெகசஸ் ஸ்பைவேர் முதன்முதலில் 2016ல் தான் வெளிச்சத்துக்கு வந்தது. முதன்முதலில் அரபு நாட்டு சமூக ஆர்வலர் ஒருவரின் ஃபோன் ஹேக் செய்யப்பட்டது. அப்போது பெகசஸ் ஐஃபோன்களை தாக்குவதாக கண்டறியப்பட்டது. உடனே ஆப்பிள் ஒரு புதிய அப்டேட்டை கொண்டு இந்த ஸ்பைவேரை எதிர்கொண்டது.


கிரேக்க புராணங்களில் பெகசஸ் என்பது ஒரு கற்பனைக் குதிரை. இப்போது நாம் கேள்விப்படும் இந்த பெகசஸ் நாம் கற்பனைகூட செய்துகொள்ள முடியாத அளவுக்கு பல இணைய தாக்குதல்களை செய்து வருகிறது. இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ உருவாக்கிய பெகசஸ் செயலி இப்போது இந்தியாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் இந்தியாவின் சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ்-அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன. என்எஸ்ஓ மீது ஏற்கெனவே வாட்ஸ் அப் நிறுவனமும் புகார் கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.