அடால்ஃப் ஹிட்லர் உபயோகித்ததாகக் கருதப்படும் கைக்கடிகாரம் அமெரிக்க ஏலம் ஒன்றில் 1.1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டுள்ளது. யூரோ மதிப்பில் இதன் விலை 900,000.
ஸ்வஸ்திகா, நாஜி கழுகு மற்றும் AH என்ற முதலெழுத்துக்களைக் கொண்ட இந்த ஹூபர் டைம்பீஸ் பெயர் தெரியாத ஒருவரால் வாங்கப்பட்டது. ஆனால் இந்த கடிகாரம் ஏலத்தில் விடப்பட்டதற்கு யூதத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
34 யூதத் தலைவர்கள் கையொப்பமிட்ட ஒரு மனம் திறந்த கடிதத்தில் மேரிலாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் ஏல நிறுவனமான அலெக்சாண்டர் ஹிஸ்டாரிக்கல் ஆக்ஷன்ஸ் நிறுவனம் கைக்கடிகாரத்தை விற்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் வரலாற்றைப் பாதுகாப்பதே அதன் நோக்கம் என்று ஏல நிறுவனம் ஜெர்மன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.
கடிகாரம் குறித்த விவரத்தில் நாஜி தலைவர் ஹிட்லருக்கு 1933ல் அவர் பிறந்தநாள் அன்று பரிசாக வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, அதே ஆண்டுதான் அவர் ஜெர்மனியின் அதிபராக நியமிக்கப்பட்டார்.
பவேரியாவின் மலைகளில் ஹிட்லரின் பெர்காஃப் படை மீது சுமார் 30 பிரெஞ்சு வீரர்கள் தாக்கியபோது, அந்த கடிகாரம் 'போரில் கொள்ளையடிக்கப்பட்டு' கைப்பற்றப்பட்டதாக அந்த விவரம் கூறுகிறது.
இதே நிறுவனம் இதற்கு முன்பு ஹிட்லர் உபயோகித்ததாகக் கூறப்படும் டெலிபோனை ஏலம் விட்டது குறிப்பிடத்தக்கது.